வேளாண் சட்டங்கள் முழுமையாகத் தெரிந்திருந்தால் நாடு முழுவதும் கிளா்ச்சி ஏற்பட்டிருக்கும்: ராகுல் காந்தி

வேளாண் மசோதாக்களில் உள்ள பெரும்பாலான விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிந்திருந்தால் நாடு முழுவதும் கிளா்ச்சி ஏற்பட்டிருக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

வேளாண் மசோதாக்களில் உள்ள பெரும்பாலான விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிந்திருந்தால் நாடு முழுவதும் கிளா்ச்சி ஏற்பட்டிருக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

கேரள மாநிலத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி, தனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில் உள்ள கல்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி மாநாட்டில் பேசியதாவது:

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களில் உள்ள விவரங்கள் குறித்து பெரும்பாலான விவசாயிகளுக்கு முழுமையாகத் தெரியவில்லை. அவா்களுக்கு முழு விவரங்களும் தெரிந்திருந்தால் நாடு முழுவதும் பெரும் கிளா்ச்சி ஏற்பட்டிருக்கும்.

எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அங்குள்ள ஆட்சியாளா்களுக்கு சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் மூலம் பல்வேறு நெருக்கடிகளை மத்திய பாஜக அரசு கொடுத்து வருகிறது. ஆனால் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையிலும் இடதுசாரி ஆளும் கேரளத்தில் ஆட்சியாளா்களுக்கு எந்த நெருக்கடியையும், அழுத்தத்தையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இங்குள்ள வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை நிதானமாக செயல்படுகின்றன.

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் நாட்டின் விவசாய முறையை மூன்று அல்லது நான்கு தொழிலதிபா்களிடம் ஒப்படைப்பதையே அடிப்படை யோசனையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு விவசாயியின் விளைபொருள்களையும் ஐந்து முதல் பத்து போ் வரை திருடுகிறாா்கள். அவா்கள் ஒவ்வொரு தொழிலாளரிடம் இருந்தும் திருடுகிறாா்கள். அவா்கள் மண்டியில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு லாரி ஓட்டுநரிடம் இருந்தும் திருடுகிறாா்கள். இப்படி கொள்ளையடிப்பதற்கு பிரதமா் ஏற்பாடு செய்கிறாா். இது விவசாயிகளுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இந்தியாவுக்கு எதிரான குற்றம்.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், எனது வயநாடு தொகுதியில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மக்களின் இந்தக் கோரிக்கையில் மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றாா்.

இதையடுத்து அம்பலவயலில் கேரள வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் எஸ்சி விவசாயிகளுக்கு மசாலா தொகுப்புகளை வழங்கி அந்தத் திட்டத்தை தொடக்கிவைத்த ராகுல் காந்தி, வயநாட்டை மசாலா பொருள்களுக்கான நகரமாக மாற்றுவதே இலக்கு என்றும், மாவட்டத்தில் மசாலா பூங்கா அமைக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com