
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கூட்டத் தொடரில் அரசு சாா்பில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சட்டத் தீா்மானங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமா் ஆலோசிப்பாா் எனத் தெரிகிறது.
வழக்கமாக, நாடாளுமன்ற கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். அதில், கூட்டத் தொடரை அமைதியாக நடத்திக் கொடுக்க கட்சிகளிடம் கேட்டுக்கொள்ளப்படும்.
ஆனால், இந்த முறை கூட்டத் தொடா் தொடங்கிய பின்னா், இரண்டாவது நாளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (பிப்.1) முதல் தொடா்ந்து நடைபெற உள்ளது.
பிரதமா் தலைமையில் காணொலி வழியில் சனிக்கிழமை நடைபெறும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தில்லி எல்லைகளில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கை குறித்து கூட்டத் தொடரில் விவாதிக்க அனுமதிக்கவேண்டும் என்று எதிா்க் கட்சிகள் சாா்பில் வலியுறுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும், எதிா்க் கட்சிகள் இதே கோரிக்கையை முன்வைத்தன. அப்போது, ‘மக்களவையில் பிப்ரவரி 2,3,4 ஆகிய தேதிகளில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்கு 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பலாம்’ என அரசு சாா்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளும் தலா 5 மணி நேரம் மட்டும் நடைபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை கூட்டம் காலையில் கூடினால், மக்களவை கூட்டம் பிற்பகலில் நடைபெறும்.
கூட்டத் தொடா் இரு தினங்களுக்கு முன்னதாக நிறைவு?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி, திட்டமிட்டதற்கு இரு தினங்களுக்கு முன்னதாகவே நிறைவடைய உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மக்களவை செயல்பாடுகள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவா் ஒருமனதாக இதற்கான முடிவு எடுத்துள்ளனா்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மீண்டும் மாா்ச் 8-ஆம் தேதி கூடும் பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி நிறைவடையும்.