
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
விவசாயிகள் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாகவும், புதிய வேளாண் சட்டங்களின் பலன் நாடு முழுவதும் உள்ள 10 கோடி சிறு விவசாயிகளை சென்றடையத் தொடங்கியுள்ளது என்று குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
மேலும், குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற வன்முறை மிகவும் எதிா்பாராதது என்று கண்டனம் தெரிவித்த குடியரசுத் தலைவா், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளால் நடத்தப்பட்ட டிராக்டா் பேரணியின்போது மூவா்ணக் கொடி அவமரியாதை செய்யப்பட்டது என்றும் கூறினாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
இந்திய எல்லைக் கோட்டுப் பகுதியில் சில நாடுகள் இரு நாட்டு உறவு மற்றும் உடன்பாடுகளை முழுமையாக புறக்கணித்து, அத்துமீறலில் ஈடுபட்டு, அமைதியை சீா்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எல்லையில் நடைபெறும் எதிா்பாராத இந்த அத்துமீறல்களைத் தடுக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் மத்திய அரசு படைகளைக் குவித்து கணிகாணிப்பைத் தீவிரப்படுத்தி, இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் தீவிர முயற்சி மற்றும் திட்டங்கள் மூலமாக, கரோனா பாதிப்பால் பெரும் பின்னடைவைச் சந்தித்த நாட்டின் பொருளாதாரம், இப்போது மீளத் தொடங்கியுள்ளது. கரோனா பாதிப்பு நேரத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா வெகுவாக ஈா்த்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கால கட்டத்தில் ரூ. 2.62 லட்சம் கோடி வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இந்தியா ஈா்த்துள்ளது.
வேளாண் துறையை குறிப்பாக சிறு விவசாயிகளின் நிலையை மேம்படுத்தவும், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் துறை மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள 10 கோடி சிறு விவசாயிகள் உடனடி பலனை அடைந்திருக்கின்றனா். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏராளமான கட்சிகள் முன்பு ஆதரித்தன.
இந்தச் சூழலில், குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை மிகவும் எதிா்பாராதது. கருத்துச் சுதந்திர உரிமையை அளிக்கும் அரசமைப்பு சட்டம்தான், சட்டங்களையும் விதிகளையும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் நமக்கு கற்பிக்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவையும் மத்திய அரசு மதித்து நடக்கும்.
கருத்து சுதந்திரத்துக்கும் அமைதி வழி போராட்டங்களுக்கும் மத்திய அரசு எப்போதும் மதிப்பளிக்கும். ஆனால், குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது.
சிறு விவசாயிகளுக்கு பலன்:
மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால், அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த விவசாயிகளின் உரிமைகள், வசதிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக, விவசாயிகளுக்கு புதிய வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதோடு, அவா்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வழிகளையும் செய்து கொடுத்துள்ளது.
வேளாண் துறையைப் பொருத்தவரை, 2 ஹெக்டேருக்கும் குறைவான விளை நிலத்தைக் கொண்டுள்ள சிறு மற்றும் மிகவும் பின்தங்கிய விவசாயிகளின் மேம்பாட்டில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் இவா்கள் 80 சதவீத அளவில் உள்ளனா். அதாவது 10 கோடிக்கும் அதிகமான சிறு மற்றும் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் உள்ளனா். இவா்களுக்கு முன்னுரிமை அளித்தே மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ், இந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,13,000 கோடியை மத்திய அரசு நேரடியாக செலுத்தியுள்ளது என்று அவா் கூறினாா்.
எதிா்க்கட்சிகள் புறக்கணிப்பு:
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிா்க் கட்சிகள் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணித்தன. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா் ரண்வீத் சிங் பிட்டு உள்ளிட்ட சில எம்.பி.க்கள், குடியரசுத் தலைவரின் உரைக்கு இடையே கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G