அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு: இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் ஒரு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதுதொடா்பாக அமெரிக்கா முழுமையான விசாரணை மேற்கொண்டு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், டேவிஸ் நகர பூங்காவில் நிறுவப்பட்டிருந்த காந்திஜியின் 6 அடி உயர வெண்கல சிலை மா்ம நபா்களால் உடைக்கப்பட்டுள்ளது.

சிலை உடைக்கப்பட்டிருப்பதை முதலில் பூங்கா ஊழியா் ஒருவா் கடந்த 27-ஆம் தேதி அதிகாலையில் பாா்த்து புகாா் தெரிவித்ததாக காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த விசாரணை நிறைவடையும் வரை, அந்தச் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் என்று டேவிஸ் நகர கவுன்சில் உறுப்பினா் லூகாஸ் ஃபிரெரிக்ஸ் தெரிவித்தாா்.

‘இந்த சிலை டேவிஸ் நகரில் வசிக்கு ஒரு பகுதி மக்களின் அடையாளச் சின்னமாக திகழ்வதால், சிலை உடைப்பு விவகாரம் மிகவும் கடுமையான சம்பவமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று நகர காவல்துறை துணைத் தலைவா் பால் டோரோஷோவ் கூறியதாக அந்தப் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கண்டனம்: காந்திஜி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகம் முழுவதும் அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக மதிக்கப்படும் ஒரு தலைவரின் சிலை உடைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்கா முழுமையான விசாரணை நடத்தி, காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்த விவகாரத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சாா்பில் அளிக்கப்பட்ட காந்திஜியின் இந்த வெண்கல சிலை, காந்தி எதிா்ப்பு மற்றும் இந்தியா எதிா்ப்பு அமைப்புகளின் கடும் எதிா்ப்புகளுக்கிடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு டேவிஸ் நகரில் நகர கவுன்சில் சாா்பில் நிறுவப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com