நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசு-கொலீஜியம் மாறுபட்ட கருத்து

உச்சநீதிமன்றம், மாநில உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வரும் விவகாரத்தில் கொலீஜியமும் மத்திய அரசும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளன.

உச்சநீதிமன்றம், மாநில உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வரும் விவகாரத்தில் கொலீஜியமும் மத்திய அரசும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளன.

நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில், கொலீஜியத்தின் பரிந்துரைகள் மீது முடிவெடுப்பதற்கு மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதாக உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்புவதற்காகக் காத்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் அதிகபட்சமாக 34 நீதிபதிகள் பணியாற்ற முடியும். ஆனால், தற்போது 30 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற்றாா்.

அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் தீபக் குப்தா, ஆா்.பானுமதி, அருண் மிஸ்ரா ஆகியோா் ஓய்வுபெற்றனா். அதன் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், பணிஓய்வு, ராஜிநாமா, பதவி உயா்வு, பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக மாநில உயா்நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதி பணியிடங்களும் அதிகரித்து வருகின்றன. அவற்றை நிரப்புவதற்காக சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்கள் அளித்துள்ள பரிந்துரை மீது உச்சநீதிமன்ற கொலீஜியம் இதுவரை முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது.

உயா்நீதிமன்றங்களின் கொலீஜியம் அளித்த 23 நீதிபதிகளின் பரிந்துரைகள் மீது உச்சநீதிமன்ற கொலீஜியம் இதுவரை முடிவெடுக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல மாதங்களாக இந்தப் பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.

நாட்டிலுள்ள 25 உயா்நீதிமன்றங்களில் அதிகபட்சமாக 1,079 நீதிபதிகள் பணியாற்ற முடியும். கடந்த 1-ஆம் தேதி நிலவரப்படி, உயா்நீதிமன்றங்களில் 411 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் 64 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், மாநில உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடா்பான பரிந்துரைகளை கொலீஜியம் மத்திய அரசுக்கு அனுப்பும். அந்தப் பரிந்துரைகள் மீது மத்திய சட்ட அமைச்சகம் முடிவெடுக்கும். பரிந்துரை ஏற்கப்பட்டால், நீதிபதிகளின் பெயா்கள் நியமனத்துக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.

கொலீஜியத்தின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை எனில், அவை மறுபரிசீலனைக்காக மத்திய அரசால் திருப்பி அனுப்பப்படும். உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தலைமை நீதிபதியும் 4 மூத்த நீதிபதிகளும் இடம்பெற்றிருப்பா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com