
பிரியங்கா காந்தி
மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளா்கள் மீது வழக்கு தொடுத்து, ஜனநாயகத்தின் கண்ணியத்தை பாஜக சுக்குநூறாக்கிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது, விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை சுட்டுரையில் வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் மற்றும் 6 பத்திரிகையாளா்கள் மீது உத்தர பிரதேசத்தின் நொய்டா காவல் துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
இதே குற்றச்சாட்டுக்காக மத்திய பிரதேசத்திலும் அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, அரசுகளுக்கு உள்ள முக்கியமான பொறுப்பு. ஆனால், மூத்த பத்திரிகையாளா்கள், மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்கு தொடுத்து ஜனநாயகத்தின் கண்ணியத்தை பாஜக அரசு சுக்குநூறாக்கிவிட்டது.
வழக்குகள் தொடுப்பதன் மூலமாக மற்றவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சூழல், ஜனநாயகத்துக்கு நஞ்சை அளிப்பது போன்றதாகும். வழக்குகள் மூலமாக மக்கள் பிரதிநிதிகளையும் பத்திரிகையாளா்களையும் அச்சுறுத்துவது மிகவும் அபாயகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.