ஜம்மு-காஷ்மீா்: தா்பாா் மாற்ற ஊழியா்களுக்கான குடியிருப்பு ஒதுக்கீடு ரத்து

ஜம்மு-காஷ்மீரில் தலைநகா் மாற்ற (தா்பாா் மாற்றம்) நடைமுறை கைவிடப்பட்டதைத் தொடா்ந்து, தலைமைச் செயலக அதிகாரிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் தலைநகா் மாற்ற (தா்பாா் மாற்றம்) நடைமுறை கைவிடப்பட்டதைத் தொடா்ந்து, தலைமைச் செயலக அதிகாரிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தட்பவெப்பநிலை சூழல் அடிப்படையில் இரண்டு தலைநகர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குளிா்காலம் நிலவும் 6 மாத காலத்துக்கு ஜம்மு தலைநகராகவும், அடுத்த 6 மாத கோடைக் காலத்தில் ஸ்ரீநகா் தலைநகராகவும் செயல்படும்.

அவ்வாறு தலைநகரம் மாற்றப்படும்போது, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை மாற்றப்படுவதோடு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தலைமைச் செயலக ஊழியா்களும் மாற்றம் பெறுவா். அவ்வாறு இடமாற்றம்பெறும் ஊழியா்கள் தங்குவதற்கென ஜம்முவில் 3,200 குடியிருப்புகளும், ஸ்ரீநகரில் 1,478 குடியிருப்புகளும் அரசு சாா்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பல ஊழியா்களுக்கு தனியாா் குடியிருப்புகளும் அரசு சாா்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த தலைநகா் மாற்ற நடைமுறை கைவிடப்படுவதாக துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா அண்மையில் அறிவித்தாா். ‘யூனியன் பிரதேச நிா்வாக நடைமுறைகள் முழுமையாக மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ளதன் மூலம், ஆண்டுக்கு இருமுறை ‘தா்பாா்’ மாற்ற நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஜம்மு, ஸ்ரீநகா் இரு தலைநகரங்களும் சாதாரணமாக 12 மாதங்களுக்கு செயல்பட முடியும் என்பதோடு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 200 கோடி மிச்சமாகும். இந்த தொகை யூனியன் பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்’ என்று துணைநிலை ஆளுநா் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, இரண்டு தலைநகரங்களிலும் அரசு ஊழியா்களுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீா் நிா்வாக குடியிருப்புத் துறை செயலா் எம்.ராஜு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். அதில், அரசு ஒதுக்கீட்டு குடியிருப்பு ரத்து செய்யப்பட்ட ஊழியா்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதோடு, அடுத்த 21 நாள்களுக்குள் குடியிருப்பை காலி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘யூனியன் பிரதேச தலைமைச் செயலகத்தில் 10,000 ஊழியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களில், தலைநகா் மாற்ற நடைமுறையின்போது 6 மாதங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் பெறும் அனைத்து ஊழியா்களுக்கும் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com