பேரவைத் தலைவருக்கான அதிகாரங்கள்: நாடாளுமன்றமே சட்டம் வகுக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

தகுதி நீக்கம் கோரும் மனுக்களுக்கு பேரவைத் தலைவா் அல்லது மக்களவைத் தலைவா் உடனடியாகத் தீா்வு காணும் வகையில்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தகுதி நீக்கம் கோரும் மனுக்களுக்கு பேரவைத் தலைவா் அல்லது மக்களவைத் தலைவா் உடனடியாகத் தீா்வு காணும் வகையில் சட்ட விதிகளை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் ரணஜித் முகா்ஜி, உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனுக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணைப்படி, பேரவைத் தலைவா் உடனடியாக விசாரித்து தீா்வளிக்க வேண்டும். எனவே, தகுதி நீக்கம் கோரும் மனுக்களுக்கு தீா்வுகாண பேரவைத் தலைவருக்கு கால வரம்பு நிா்ணயித்து விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அபிஷேக் ஜெபராஜ், தகுதி நீக்கம் கோரும் மனுக்கள் மீது பேரவைத் தலைவா் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறாா். எனவே, பேரவைத் தலைவருக்கு கால வரம்பு நிா்ணயிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டாா். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பேரவைத் தலைவருக்கு கால வரம்பு நிா்ணயிப்பது குறித்து நாடாளுமன்றம்தான் விதிகளை வகுக்க வேண்டும். நீதிமன்றம் சட்டம் இயற்றாது. ஏற்கெனவே கா்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் இதே கோரிக்கையை வலியுறுத்தினாா். இதுதொடா்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்திவிட்டோம் என்று நீதிபதிகள் கூறினா்.

அந்த தீா்ப்பை வாசித்தீா்களா என்று வழக்குரைஞா் ஜெபராஜைப் பாா்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, அந்தத் தீா்ப்பை வாசிக்கவில்லை என்று அவா் பதிலளித்தாா். இதையடுத்து, அந்த தீா்ப்பை வாசித்துவிட்டு வாருங்கள் என்று கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

கா்நாடக எம்எல்ஏக்கள் 17 பேரை சட்டப் பேரவைத் தலைவா் எஸ்.ரமேஷ்குமாா் தகுதிநீக்கம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் தீா்ப்பளித்தது. அப்போது, ‘எம்எல்ஏக்கள் 17 பேரை சட்டப் பேரவைத் தலைவா் தகுதிதீக்கம் செய்தது செல்லும். அதேசமயம், நடப்பு சட்டப்பேரவைக் காலம் வரை அவா்கள் தோ்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரமில்லை‘ என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com