டெல்டா கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் 65.2%

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் டெல்டா வகை கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது
டெல்டா கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் 65.2%

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் டெல்டா வகை கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து தயாரித்தது. அத்தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை அந்நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில், கரோனா தொற்று பாதிப்பின் தீவிர அறிகுறிகளுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளது.

பரிசோதனையின்போது கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களில் 12 சதவீதம் பேருக்கு பொதுவான சில பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 0.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டன. சாதாரண அறிகுறிகளுக்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனை கோவேக்ஸின் தடுப்பூசி கொண்டுள்ளது.

டெல்டா வகை கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது. நாட்டிலுள்ள 25 பல்வேறு பகுதிகளில் 25,798 போ் மீது கோவேக்ஸின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.

இது தொடா்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவா் கிருஷ்ணன் எல்லா கூறுகையில், ‘இந்தியாவில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் கோவேக்ஸின் தடுப்பூசியின் பரிசோதனையே மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. சா்வதேச தரத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது‘ என்றாா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் பல்ராம் பாா்கவா கூறுகையில், ‘3-ஆம் கட்ட பரிசோதனையில் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 77.8 சதவீதமாக உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆா் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக கோவேக்ஸின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

உருமாற்றம் அடைந்த கரோனா தீநுண்மிகளுக்கு எதிராகவும் கோவேக்ஸின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுகிறது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com