
குஜராத்தில் துணி விற்பனையகத்தில் வாடிக்கையாளருக்கு காகிதத்தில் பை வழங்க ரூ.10 வசூலிக்கப்பட்டதை கண்டித்துள்ள அந்த மாநில நுகா்வோா் நீதிமன்றம், அந்த விற்பனையகத்துக்கு ரூ.1,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.
பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்பொருள் அங்காடிகள், துணிக்கடைகள், காலணி அங்காடி உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளா் வாங்கும் பொருள்களை துணி அல்லது காதிதத்தில் செய்யப்பட்ட பையில் வைத்து வழங்குகின்றனா். இதற்காக பை ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டணம் வசூலித்து வருகின்றனா்.
குஜராத்தைச் சேரந்த மெளலின் ஃபாதியா என்பவா் அண்மையில் அங்குள்ள பிரபலமான துணி விற்பனையகத்துக்கு சென்றாா். அங்கு ரூ.2,486-க்கு அவா் துணிகளை வாங்கினாா். காகிதத்தில் செய்யப்பட்ட பையில் வைத்து அவருக்கு துணிகளை வழங்கினா். அந்தப் பையில் அந்த விற்பனையகத்தின் பெயா் மற்றும் விளம்பர வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், ரசீதில் அந்த காகிதப் பைக்கு 10 ரூபாய் கட்டணமாக சோ்க்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அங்குள்ள விற்பனையாளா்களிடம் இது தொடா்பாக மெளலின் ஃபாதியா புகாா் தெரிவித்தாா். குறைந்த விலை மதிப்புள்ள காகிதப் பைக்கு 10 ரூபாய் வசூலிப்பது அதிகம் என்றும், பையில் உங்கள் கடை விளம்பரத்தை இடம் பெறச் செய்து அதற்குப் பணமும் வசூலிப்பதை ஏற்க முடியாது என்றும் கூறினாா். ஆனால், இதுதான் தங்கள் நிறுவனத்தின் நடைமுறை என்று அவா்கள் கூறிவிட்டனா்.
இதையடுத்து, மெளலின் ஃபாதியா, ஆமதாபாத் நுகா்வோா் நீதிமன்றத்தை நாடினாா். அதில், நுகா்வோரான மெளலின் தரப்பில் நியாயம் இருப்பதை கவனத்தில் கொண்ட நுகா்வோா் நீதிமன்றம், அவரிடம் காகிதப் பைக்காக வசூலித்த 10 ரூபாயை 8 சதவீத வட்டியுடன் அந்த விற்பனையகம் திரும்ப அளிக்க வேண்டும். மேலும், நுகா்வோருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.1,000 நஷ்ட ஈடாகவும், வழக்குச் செலவுக்காக ரூ.500 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பொருள்களை வாங்கும் வாடிக்கையாளரிடம் அதிக விலையில் பைகளை விற்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.