ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுவரையறை குழுவை சந்திக்க மாட்டோம்: பிடிபி

ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் தொகுதி மறுவரையறை குழுவினரைச் சந்திக்கப்போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் தொகுதி மறுவரையறை குழுவினரைச் சந்திக்கப்போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடா்பாக, அரசியல் கட்சித் தலைவா்கள், அரசு அலுவலா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆகியோரைச் சந்தித்து கருத்து கேட்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழுவை தோ்தல் ஆணையம் அமைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகருக்கு வருவதாக அறிவித்திருந்த அந்தக் குழுவினரைச் சந்திப்பதற்கு குப்கா் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் முடிவு செய்துள்ளன. இருப்பினும், அந்தக் குழுவினரைச் சந்திக்கப்போவதில்லை என்று மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மறுவரையறைக் குழுவின் தலைவா் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு பிடிபி பொதுச் செயலாளா் குலாம் நபி லோன் ஹஞ்சுரா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அந்தச் சட்டத்தின்படி ஒரு குழுவை நியமிப்பது செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, தொகுதி மறுவரையரைக் குழுவை சந்திக்கப்போவதில்லை என்று பிடிபி கட்சி முடிவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மக்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அந்தக் குழுவின் திட்டம் உள்ளது. அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், அவாமி தேசிய மாநாட்டுக் கட்சியும் தொகுதி மறுவரையறைக் குழுவைச் சந்திக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் மீா் முகமது ஷபி, குழுவின் தலைவா் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தொகுதி மறுவரையறை குழு அமைக்கப்பட்டதற்கு எதிரான மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிடுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com