ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

கரோனா பேரிடர் காரணமாக, பள்ளிச் செல்லும் குழந்தைகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

கரோனா பேரிடர் காரணமாக, பள்ளிச் செல்லும் குழந்தைகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.

இப்படி நீண்ட நாள்களுக்கு குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பது, எதிர்காலத்தில் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சிகா குப்தா கூறுகையில், மற்ற தொழில்நுட்ப சாதனங்களை விடவும், செல்லிடப்பேசிகள் விலைக் குறைவாக இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் செல்லிடப்பேசி வாயிலாகவே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றன.

இதையும் படிக்கலாமே.. ஆன்லைன் ரேடியோ கல்வி!

 ஆனால், செல்லிடப்பேசிகளை பல மணி நேரமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை அல்லது பொதுவான கண்பார்வை குறைபாடு ஏற்படும்.

செல்லிடப்பேசி வாயிலாக படிப்பதும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதும், கண்களுக்கு மிகவும் தீங்கானது. அதற்கு பதிலாக கணினி அல்லது தொலைக்காட்சி போன்ற பெரிய திரைகளைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை, குழந்தைகளின் செல்லிடப்பேசிகளை தொலைக்காட்சியுடன் இணைத்து விடலாம். செல்லிடப்பேசிகளை ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். ஆனால், செல்லிடப்பேசியே வாங்க வழியில்லாமல் பல மாணவ, மாணவிகள் இருக்கும் போது, அதனை விட விலை கூடுதலான தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவது என்பது இயலாத காரியம் என்கிறார்.

குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னைகளோடு தற்போதுவரை பெரிய அளவில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. கரோனா போன்ற பேரிடர் காலத்தில் குழந்தைகளை மருத்துவமனைகளுக்குக் கூட்டி வர பெற்றோர் பயப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில், இந்த பிரச்னை அதிகரிக்கும். நிச்சயம் இந்த ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கும். ஏராளமான குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல குழந்தைகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக செல்லிடப்பேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் அபாயகரமானது என்கிறார் மருத்துவர்.

இதையும் தெரிந்து கொள்ளலாம்.. டெலிகிராமிலும் விடியோ சாட்!

மற்றொரு மருத்துவமனையில், குழந்தைகளுக்கான கண் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஷாலினி கார்க் கூறுகையில், சுமார் இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்கள். இதனால், கிட்டப்பார்வை குறைபாடு கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1.5 முதல் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 90% பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடு அல்லது அவர்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் கண்ணாடியின் திறனை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதில், 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, செல்லிடப்பேசிகளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், கண்களுக்கு ஏற்பட்ட அதீத களைப்புதான் என்கிறார்.

மாணவர்களுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை குறைபாட்டுக்குக் காரணங்கள் என்னவென்று டாக்டர் சிகா குப்தா விளக்கம் அளிக்கையில், கண்களுக்கு மிக அருகில் செல்லிடப்பேசியை வைத்துக் கொண்டு பார்ப்பது, அதில் வெளிச்சத்தைக் குறைவாக வைப்பது, சிறிய அளவில் எழுத்துக்களை வைப்பது, செல்லிடப்பேசியின் ஸ்க்ரீன் அவ்வப்போது மின்னுவது, தவறான நிலையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் செல்லிடப்பேசியை பார்ப்பது போன்றவை கிட்டப்பார்வைக்கு வழிவகுக்கும் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com