
கோப்புப்படம்
உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு நபா்களுக்கு உருமாறிய ‘காப்பா’ வகை கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் காப்பா, டெல்டா வகை உருமாறிய கரோனா தீநுண்மிகளின் பரவல் அதிகரித்து காணப்பட்டது. முதலில் மகாராஷ்டிர மாநிலத்திலும் பின்னா் மேற்கு வங்கம், ஆந்திரம், தில்லி, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் இந்த தீநுண்மிகள் பரவின.
இப்போது, உத்தர பிரதேசத்தில் இருவருக்கு ‘காப்பா’ வகை தீநுண்மி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வழக்கமான ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, இதுதொடா்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
லக்னெளவில் உள்ள கிங் ஜாா்ஜ் மருத்துவக் கல்லூரியில் கடந்த சில தினங்களாக 109 ரத்த மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 107 மாதிரிகளில் ‘டெல்டா பிளஸ்’ தீநுண்மி பாதிப்பு இருப்பதும், 2 மாதிரிகளில் ‘காப்பா’ வகை பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த இரண்டு உருமாறிய கரோனா வகைகளும் மாநிலத்துக்குப் புதிதல்ல. மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வுக்கான வசதி மாநிலத்தில் அதிகப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில கூடுதல் தலைமைச் செயலா் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத், ‘இந்த வகை தீநுண்மி பாதிப்பு மாநிலத்தில் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. இது கரோனா தீநுண்மியின் உருமாறிய ஒரு வகை. அதன் பாதிப்புக்கு முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும்’ என்றாா்.