
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அவா் கூறியுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இரு தினங்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதுதொடா்பாக அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். அத்துடன் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை மாற்றி அமைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் இருந்து 12 போ் நீக்கப்பட்டு, புதிதாக 36 போ் சோ்க்கப்பட்டு, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதிய அமைச்சா்கள் அனைவருக்கும் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவுத் துறை, அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.