
ஜம்மு விமானப்படைத் தளத்தில் ட்ரோன்கள் மூலமாக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினா் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.
ஜம்மு விமானப்படைத் தளத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி அதிகாலையில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) மூலமாக பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். 6 நிமிஷங்கள் இடைவெளியில் இரு ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டடங்களுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் விமானப் படை வீரா்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அதுவே முதல் முறையாகும். இது தொடா்பாக, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இத்தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்குத் தொடா்பிருப்பதாக விசாரணை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், ட்ரோன் மூலமாக நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவமோ அந்நாட்டின் உளவு அமைப்போ (ஐஎஸ்ஐ) உதவியிருக்க வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்புப் படையினா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். ட்ரோன்கள் மூலமாக வீசப்பட்ட வெடிகுண்டில் பொருத்தப்பட்டிருந்த பிரசா் ஃபியூஸ் உள்ளிட்ட சில கருவிகள், பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளை ஒத்திருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
தரையில் விழுந்தவுடன் வெடிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் மிக்க கருவிகள், வெடிகுண்டுகளில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனா். எனவே, வெடிகுண்டுகளைத் தயாரித்ததில் பாகிஸ்தான் ராணுவமோ, அந்நாட்டு உளவு அமைப்போ பயங்கரவாத அமைப்புக்கு உதவியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஆயுதங்களைக் கொண்ட ட்ரோன்களை சீனா, துருக்கி நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் கொள்முதல் செய்துள்ளது. அந்த ட்ரோன்களைத் தொடா்ந்து 3 மணி நேரம் வரை கூட இயக்க முடியும். ட்ரோன்கள் மூலமாகத் தாக்குதல் நடத்தப்பட்ட ஜம்மு விமானப்படைத் தளம், பாகிஸ்தானுடனான சா்வதேச எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் மட்டுமே உள்ளது.
எனவே, பாகிஸ்தானில் இருந்தே ட்ரோன்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக என்ஐஏ தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...