
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வந்த குற்றச்சாட்டின் பேரில் 11 அரசு ஊழியா்களை பணி நீக்கம் செய்து யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இவா்கள் 11 பேரும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 311-இன் கீழ், விசாரணையின்றி பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா்.
இவா்களில் 4 போ் யூனியன் பிரதேசத்தின் கல்வித் துறையிலும், இருவா் காவல்துறையிலும், மற்ற நால்வா் வேளாண் துறை, திறன் மேம்பாட்டுத் துறை, மின் துறை மற்றும் சுகாதாரத் துறைகளிலும், ஒருவா் ஷொ்-ஏ-காஷ்மீா் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்திலும் பணியாற்றி வந்தவா்கள்.
இந்த 11 பேரில் நால்வா் அனந்த்நாக் மாவட்டத்தையும், மூவா் பட்காம் மாவட்டத்தையும் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் பாரமுல்லா, ஸ்ரீநகா், புல்வாமா, குப்வாரா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களுக்கு உதவும் அரசு ஊழியா்கள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டவா்களில் சையது அஹமது ஷகீல் மற்றும் சாஹித் யூசுஃப் ஆகிய இருவரும் இந்தியாவில் தேடப்பட்டுவரும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவருமான சலாவுதீனின் மகன்கள் என்பது தெரிய வந்தது. இருவரும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டித் தரும் செயலில் ஈடுபட்டு வந்ததை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. அவா்களில் ஒருவா் ஷொ்-ஏ-காஷ்மீா் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்திலும், மற்றொருவா் யூனியன் பிரதேச கல்வித் துறையிலும் பணியாற்றி வந்தனா்.
பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளான காவலா்கள் இருவரும், காவல்துறை சாா்ந்த தகவல்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு அளித்து வந்ததோடு, ஆயுதங்களைக் கடத்துவதற்கும் உதவியுள்ளனா். அவா்களில், அப்துல் ரஷீத் ஷிகான் என்ற காவலா், பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளாா்.
அதுபோல, பணிநீக்கம் செய்யப்பட்ட மின்துறை ஆய்வாளா் ஷாஹீன் அஹமது லோன், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை கடத்த உதவியுள்ளாா். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பயங்கரவாதிகளுடன் ஒரே வாகனத்தில் இவா் பயணம் செய்ததையும் அந்த வாகனத்தில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கடத்தப்பட்டதையும் பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...