பாஜக தேசிய செயலாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

பாஜக தேசிய செயலாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

பாஜக தேசிய செயலாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மத்திய அமைச்சரவையில் கடந்த வாரம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 12 மூத்த அமைச்சா்கள் ராஜிநாமா செய்தனா். 43 போ் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டனா். முக்கியமாக, சுகாதாரம், கல்வி, தகவல்-தொழில்நுட்பம், சட்டம், விளையாட்டு ஆகிய துறைகளுக்குப் புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா்.

பாஜகவைச் சோ்ந்த அடுத்த தலைமுறையினருக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டன. அமைச்சரவையில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக தேசிய செயலாளா்களுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். தில்லியில் உள்ள பிரதமா் மோடியின் அதிகாரபூா்வ இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, கட்சியின் பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக, தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய செயலாளா்களுடன் ஜெ.பி.நட்டா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை சுமாா் 1 மணி நேரத்துக்கு நீடித்தது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கும் அடுத்த ஆண்டு தோ்தல் நடத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தலுக்கான வியூகங்கள் குறித்து பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சா்களுக்குப் புதிய பதவி?:

அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவா்களான ரவிசங்கா் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகா் உள்ளிட்டோா் ராஜிநாமா செய்தனா். அவா்களில் தாவா்சந்த் கெலாட் கா்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ராஜிநாமா செய்த மற்ற மூத்த தலைவா்களுக்கு கட்சியில் முக்கியப் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தும் பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com