குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய் - சிக்கியது எப்படி ?

மகன் கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய், சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார்.  
குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய் -  சிக்கியது எப்படி ?


மகன் கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய், சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினரிடம் வசமாக சிக்கினார். 

உத்தரப் பிரதேசத்தில் சல்மா கட்டூன் என்பவர் ரசுல்பூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு அருகே தனது மகனை ஒரு பெண் காரில் கடத்திச் சென்றுவிட்டதாக கோரக்நாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடத்திய பெண் சிவப்பு நிற புடவை அணந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடனடியாக சல்மாவின் மகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் சல்மாவிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகமடைந்த காவல் துறையினர் அருகில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சல்மா தனது மகனை வேறு ஒரு பெண்ணிடம் அளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு சல்மாவின் மகனை வாங்கிச் சென்ற பெண்ணை ஹூமாயுன்பூர் என்ற பகுதியில் வைத்து காவல் துறையினர் மடக்கிப்பிடித்து சல்மாவின் மகனை பத்திரமாக மீட்டனர். குழந்தையின் அப்பா கூலித்தொழிலாளி என்பதால் சல்மாவின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கிச் சென்றவர் இருவரையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதில், ஒருவர் குழந்தை தத்தெடுக்கப்பட்டதாகவும், மற்றொருவர் ரூ.50,000-க்கு வாங்கப்பட்டதாகவும் வெவ்வேறு பதில்களைக் கூறியுள்ளனர்.

இதனால், விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே யார் சொல்வது உண்மை என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், குழந்தை கடத்தப்பட்டதாக தவறான தகவலைத் தெரிவித்ததன் காரணமாக தாய் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com