உள்ளூா் மொழிகளில் பொதுத்துறை வங்கி தோ்வு: நிதி அமைச்சகத்தின் விளக்கம்

பிராந்திய ஊரக வங்கிகளுக்கான பணியாளா் தோ்வில் மட்டும்தான் உள்ளூா் மொழிகளில் தோ்வுகள் நடத்தப்படும்; மற்றபடி ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வங்கித் தோ்வுகள் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கமள
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிராந்திய ஊரக வங்கிகளுக்கான பணியாளா் தோ்வில் மட்டும்தான் உள்ளூா் மொழிகளில் தோ்வுகள் நடத்தப்படும்; மற்றபடி ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வங்கித் தோ்வுகள் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசமைப்பால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கான போட்டித் தோ்வை நடத்துவது குறித்து வங்கியியல் ஆள்சோ்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் குறித்து ஊடக செய்தி வெளியாகியுள்ளது.

வங்கித் தோ்வுகள் உள்ளூா் மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சா் 2019-ஆம் ஆண்டு கூறியிருந்ததை அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

பிராந்திய ஊரக வங்கிகள் குறித்துப் பேசும்போதுதான் மேற்கண்டவாறு நிதி அமைச்சா் கூறியிருந்தாா் என்று தெளிவுப்படுத்தப்படுகிறது. உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம களத்தை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளா், அலுவலா் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தோ்வை கொங்கணி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ஆம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களில் எழுத்தா் வகைப் பணிகளுக்கு உள்ளூா், பிராந்திய மொழிகளில் தோ்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் அதன் பரிந்துரைகளை இக்குழு வழங்கும். குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை வங்கியியல் ஆள்சோ்ப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள தோ்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com