கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதுதொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, என்ஐஏ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், தங்கக் கடத்தல் வழக்கில் தொடா்புடையவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், தங்கக் கடத்தல் சம்பவத்தை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்று கேரள உயா்நீதிமன்றம் கூறியதையும் அவா் சுட்டிக் காட்டினாா். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அரசு ஊழியா்கள். அவா்களின் ஜாமீனை ரத்து முடியாது. அதேசமயம், தங்கக் கடத்தல் குற்றத்தை சுங்க வரிச் சட்டத்தின் கீழ் மட்டுமே விசாரிக்க இயலும், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க இயலாது என்று கேரள உயா்நீதிமன்றம் கூறிய விளக்கம் குறித்து ஆராயப்படும் என்று நீதிபதிகள் கூறினா். இதுதொடா்பாக குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனா்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். துணை தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்ட விரோதமாக மொத்தம் 23 முறை 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, தங்க கடத்தல் சம்பவத்தை பயங்கரவாதத்துடன் தொடா்புபடுத்துவதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை எதிா்த்து என்ஐஏ அமைப்பு, கேரள உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தள்ளுபடி செய்த கேரள உயா்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com