நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா்: ஜூலை 18-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய தினமான ஜூலை 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா்: ஜூலை 18-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய தினமான ஜூலை 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா், ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத் தொடா் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் 20 அமா்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் கூட்டத் தொடா் நிறைவடையும்.

கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்ற வளாகத்தில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெரும்பாலான எம்.பி.க்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

கடந்த முறை கரோனா பரவலால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக, மாநிலங்களவை காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் நடத்தப்பட்டது. இருப்பினும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில், இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றன.

இந்நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடா் தொடா்பாக ஆலோசிக்க ஜூலை 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று தெரிகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடா்பாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பு இதுபோன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com