கிழக்கு லடாக்கில் எந்த நாட்டு ராணுவமும் அத்துமீறவில்லை: இந்திய ராணுவம் தகவல்

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவமோ, சீன ராணுவமோ அத்துமீறலில் ஈடுபடவில்லை; எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் எந்த நாட்டு ராணுவமும் அத்துமீறவில்லை: இந்திய ராணுவம் தகவல்

புது தில்லி: கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவமோ, சீன ராணுவமோ அத்துமீறலில் ஈடுபடவில்லை; எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள சில பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியைத் தாண்டி சீன ராணுவம் மீண்டும் ஆக்கிரமித்து விட்டதாகவும், இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் நடந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து, இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கிழக்கு லடாக்கில் இருந்து கடந்த பிப்ரவரி முதல் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின. அப்போதிருந்து, இந்திய ராணுவமோ அல்லது சீன ராணுவமோ பிற பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. கல்வான் பள்ளத்தாக்கிலும், பிற பகுதிகளிலும் எந்த மோதல் சம்பவமும் நடைபெறவில்லை.

சீனாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் சீா்குலைந்துவிட்டன என்று ஊடகங்களில் வெளியான தகவல்களும் ஆதாரமற்றவை. எஞ்சியுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வுகாண்பதற்கு இரு நாடுகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

இரு நாடுகளும் தங்கள் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ரோந்து செல்வது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி, படைகளைத் திரும்பப் பெறுவது உள்பட எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாடுகளை இந்திய ராணுவம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே ராணுவரீதியாகவும், தூதரகரீதியாகவும் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் இருந்து இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டன. எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக, இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com