புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு மனு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிா்த்து பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, மனுத்தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சென்னை: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிா்த்து பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, மனுத்தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்- 2021ஐ, கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளா்கள் சங்கம், பத்திரிகையாளா் முகுந்த் பத்மநாபன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்குமுறை நடைமுறை இருக்க வேண்டும். டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது. மேலும் புதிய விதிகளின் படி எங்கள் சங்க உறுப்பினா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதேபோல, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, பிரபல கா்நாடக இசை கலைஞா் டி.எம்.கிருஷ்ணாவும் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசுத் தரப்பில், சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு உயா் நீதிமன்றங்களில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிா்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்றங்கள், இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே வழக்கு தொடா்பாக மத்திய அரசு 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com