அதிக செலவால் பாதியிலேயே வீடு திரும்பும் கருப்புப் பூஞ்சை நோயாளிகள்

பெங்களூரில் கருப்பு பூஞ்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், செலவை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பி வரும் துயர நிலை ஏற்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


பெங்களூருவில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், செலவை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பி வரும் துயர நிலை ஏற்பட்டுள்ளது. 

பெங்களூருவில் உள்ள ஹெப்பல் என்ற பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜமீல் என்பவரது அம்மா யாஷ்மீன் (55) கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இடது கண் வீங்கிய நிலையில் பார்வையை இழந்துள்ளர். நோய் பாதித்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒரு ஆம்போடெரிசின் தடுப்பூசிக்கு ரூ.7,448 மற்றும் அதுசார்ந்த மற்றவைக்கு ரூ.5000 வரை ஆகும். யாஷ்மீனுக்கு ஒருநாளைக்கு 3 தடுப்பூசிகள் வீதம் செலுத்த வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு ஊசிகள் மட்டுமே அவரால் அளிக்க முடிகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வேலையிழந்த ஜமீலால் தனது அம்மாவிற்கு ஆகும் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக யாஷ்மீன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

யாஷ்மீனை தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியுள்ளதால் ரூ. 7 லட்சம் வரை நிதி திரட்டி வருகிறார் ஜமீல்.

யாஷ்மீனின் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.17,000 ஆகும். ஏற்கெனவே ஜமீலின் அப்பாவும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வாரத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவானது.

இதனால், ஆம்போடெரிசின் மருந்துகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என ஜமீல் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதே போல ஷாரூக் கான் என்பவரது அப்பா அஹமது ஷெரிஃபும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கரோனா மற்றும் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு 25 நாள்களுக்கு ரூ.6.17 லட்சம் செலவாகியிருக்கிறது. ஷாரூக் கான் தனது அப்பாவுக்காக ஒருநாளைக்கு மூன்று ஆம்போடெரிசின் ஊசிகளை 22,400 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். தனது அப்பாவின் மருத்துவ செலவுகளுக்கு ஷெரீப் அவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மேற்கொண்டு செலவை சமாளிக்க முடியாமல் ஷெரீப் தனது அப்பாவை புதன் கிழமை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இதற்கு முன்பும் மற்றொரு தனியார் மருத்துவமனையில் தந்தையின் சிகிச்சைக்காக அவர் ரூ. 2 லட்சம் வரை செலவழித்திருக்கிறார்.

இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தனியார் மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்தார். ஆனால், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com