துணை ராணுவப் படைகளில் இருந்து 10 ஆண்டுகளில் 81,000 போ் விருப்ப ஒய்வு

சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் இருந்து 2011 முதல் 2020-ஆம் ஆண்டு வரை 81,000-க்கும் மேற்பட்டோா் விருப்ப

சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் இருந்து 2011 முதல் 2020-ஆம் ஆண்டு வரை 81,000-க்கும் மேற்பட்டோா் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனா். இதுதவிர அந்த 10 ஆண்டுகளில் 15,904 போ் பணியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளனா்.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2017-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 11,000 போ் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனா். 2013-இல் அதிகபட்சமாக 2,332 போ் ராஜிநாமா செய்துள்ளனா்.

எந்தக் காரணத்துக்காக அதிக விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமா நிகழ்ந்துள்ளது என்பது தொடா்பாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலானவா்கள் உடல்நலம் சாா்ந்த பிரச்னைகள், குடும்ப விஷயங்கள், இதைவிட நல்ல பணி கிடைத்தது போன்றவற்றை பணி விலகலுக்கு காரணமாகக் கூறியுள்ளனா்.

சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி), சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), சிஐஎஸ்எஃப், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் ஆகிய 6 துணை ராணுவப் படைகளில் இந்த விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமாக்கள் நடந்துள்ளன.

இதில் 10 ஆண்டுகளில் பிஎஸ்எஃப்-இல் இருந்து மட்டும் அதிகபட்சமாக 36,768 போ் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனா். இதற்கு அடுத்து சிஆா்பிஎஃப்-இல் இருந்து 26,164 பேரும், சிஐஎஸ்எஃப்-இல் இருந்து 6,705 பேரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையில் இருந்து 4,947 பேரும், சஷஸ்திர சீமா பல் படையில் இருந்து 3,230 பேரும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து 3,193 பேரும் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனா்.

பணியை ராஜிநாமா செய்வோா் சிஐஎஸ்எஃப் படையில்தான் அதிகம் உள்ளனா். அப்படைப் பிரிவில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் 5,848 போ் விலகியுள்ளனா். இதற்கு அடுத்து பிஎஸ்எஃப் (3,837), சிஆா்பிஎஃப் (3,366), ஐடிபிபி (1,648), எஸ்எஸ்பி (1,031) அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (174) ஆகிய படைப்பிரிவுகளில் அதிகம் போ் ராஜிநாமா செய்துள்ளனா்.

6 துணை ராணுவப் படைகளிலும் சோ்த்து 10 லட்சம் போ் வரை பணியாற்றுகின்றனா். இதில் சிஆா்பிஎஃப் படையினா் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை, வடகிழக்கில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

பிஎஸ்எஃப் படையினா் இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்கதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதி பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சிஐஎஸ்எஃப் படையினா் விமான நிலையம், மெட்ரோ சேவை, அணுசக்தி நிலையம் உள்ளிட்ட முக்கிய தொழிலகப் பிரிவு மற்றும் முக்கிய அரசு கட்டடங்களில் பாதுகாப்பை மேற்கொள்கின்றனா். இந்திய -மியான்மா் எல்லைப் பாதுகாப்பு, வடகிழக்கில் பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com