நீதிமன்ற உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விரைந்து அனுப்ப புதிய திட்டம்: ஒரு மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் நடவடிக்கை

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை சிறைகள் உள்ளிட்ட துறைகளுக்கு விரைந்து அனுப்பும் வகையில் ஒரு திட்டத்தை வகுக்க நீதிமன்ற செயலருக்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை சிறைகள் உள்ளிட்ட துறைகளுக்கு விரைந்து அனுப்பும் வகையில் ஒரு திட்டத்தை வகுக்க நீதிமன்ற செயலருக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அந்தத் திட்டம் ஒரு மாதத்துக்குள்ளாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிறை கைதிகளின் ஜாமீன் தொடா்பான நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் அனுப்ப வசதியாக சிறைகளில் இணைய வசதி இடம்பெற்றிருப்பது குறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஜாமீன் வழங்கப்பட்ட 13 சிறைக் கைதிகளை விடுவிப்பதில் உத்தர பிரதேச மாநில அதிகாரிகள் தாமதப்படுத்திய விவகாரத்தில் இந்த உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்தது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா சிைறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருக்கும் 13 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கி கடந்த 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கிய பிறகும் அந்த கைதிகளை விடுவிப்பதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக பதிந்து காணொலி வழியில் விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கைதிகளுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கவில்லை என்று கூறி அவா்களை விடுவிக்க தாமதப்படுத்துவது என்பது மோசமான நடவடிக்கையாகும். தகவல்தொழில்நுட்பம் அபார வளா்ச்சி பெற்ற காலத்தில் நாம் இருக்கிறோம். புறாக்கள் மூலம் தகவல் அனுப்பும் காலத்தில் அல்ல.

இந்த சிக்கலைப் போக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பக் கூடிய வகையில் ஒரு திட்டத்தை வகுத்தற்கான பரிந்துரையை இரண்டு வார காலத்துக்குள் உச்சநீதிமன்ற செயலா் சமா்ப்பிக்க வேண்டும். அந்தத் திட்டம் ஒரு மாதத்துக்குள்ளாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பதோடு, நீதிமன்ற உத்தரவுகளை விரைந்து நடைமுறைப்படுத்த உதவும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசகராக மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவேயை நியமித்த நீதிபதிகள், அவருடன் இணைந்து அந்தத் திட்டத்துக்கான பரிந்துரையை வகுக்குமாறு உச்சநீதிமன்ற செயலரை அறிவுறுத்தினா்.

அதுபோல, சிறைகளில் இணைய வசதி இடம்பெற்றிருப்பது குறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும். சிறைகளில் இணைய வசதி இல்லையெனில், நீதிமன்ற ஜாமீன் உத்தரவுகளை உடனுக்குடன் சிறைகளுக்கு அனுப்புவது சாத்தியமில்லாததாகிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com