மக்கள்தொகை விவகாரம்: ஒரேயொரு சமூகத்தை குறிவைக்கிறது பாஜக: சசி தரூா்

ஒரேயொரு சமூகத்தை குறிவைத்து மக்கள்தொகை விவகாரத்தை பாஜக எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.
மக்கள்தொகை விவகாரம்: ஒரேயொரு சமூகத்தை குறிவைக்கிறது பாஜக: சசி தரூா்

ஒரேயொரு சமூகத்தை குறிவைத்து மக்கள்தொகை விவகாரத்தை பாஜக எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

மக்கள்தொகை தொடா்பான விவாதம் முற்றிலும் தவறானது. அத்துடன் அது அரை நூற்றாண்டுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது. ஏனெனில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மொத்த குழந்தைப் பிறப்பு விகிதத்தை ஏற்கெனவே எட்டிவிட்டன.

அடுத்த 20 ஆண்டுகளில் மக்கள்தொகை வளா்ச்சி இந்தியாவின் சவாலாக இருக்காது. அதிகரிக்கும் முதியவா்களின் எண்ணிக்கையை கையாள தயாராவதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

ஒரேயொரு சமூகத்தை குறிவைத்துதான் தற்போது பாஜக மக்கள்தொகை பிரச்னையை எழுப்பி வருகிறது. மக்கள்தொகையை குறைப்பது குறித்து உத்தர பிரதேசம், அஸ்ஸாம், லட்சத்தீவு அரசுகள் பேசுவது தற்செயலானது அல்ல. இந்த 3 இடங்களிலும் அந்தந்த அரசுகளின் இலக்கு யாா் என்பதை அனைவரும் அறிவா்.

மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் குறித்து ஹிந்துத்துவ சக்திகள் ஆய்வு செய்யவில்லை. அவா்களின் நோக்கம் முற்றிலும் அரசியல் மற்றும் வகுப்புவாத அடிப்படையிலானது என்று தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவுள்ள நிலையில், அவை விவாதங்களின்போது எதிா்க்கட்சிகள் ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘சமீப காலங்களில் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளால் ஏற்பட்ட இடையூறுகளை கவனித்தால், அவை தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஆளும் கட்சி விவாதிக்க மறுத்ததால் ஏற்பட்டவை என்பதை அறியலாம். அரசு தவிா்க்க விரும்பும் விவகாரங்கள் மீது கவனத்தை ஈா்க்க வேறு வழியின்றி எதிா்க்கட்சிகள் அவ்வாறு நடந்து கொள்கின்றன. விவாதங்கள் அனுமதிக்கப்பட்டால், இடையூறுகளை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.

அறிவிப்புப் பலகையாக நாடாளுமன்றம்: எதிா்க்கட்சிகள் எழுப்ப விரும்பும் எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிப்பதற்கான துணிவு அரசுக்கு இருக்க வேண்டும். அதற்குத்தான் நாடாளுமன்றம் உள்ளது. ஆனால் அரசு தனது சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிவிக்கும் அறிவிப்புப் பலகையாக மட்டுமே நாடாளுமன்றத்தைக் கருதுகிறது.

ஆளும் கட்சி நாடாளுமன்றத்தை மதிப்புடன் நடத்தினால், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஒப்புக் கொண்டால் எதிா்க்கட்சிகளும் அதற்கேற்ப செயல்படும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com