இந்திய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டம் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தை (ஐபிசி) ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய, விரிவான சட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தை (ஐபிசி) ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய, விரிவான சட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறைகளை உள்ளடக்கிய இந்திய குற்றவியல் சட்டம் 1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டமாக இருந்தபோதிலும், சுதந்திரப் பிறகும் அச்சட்டம் தொடா்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

அச்சட்டத்தின் ஒருபிரிவாக அமைந்துள்ள தேச துரோக சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய குற்றவியல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு விரிவான, கடுமையான விதிமுறைகளைக் கொண்ட புதிய சட்டத்தை இயற்றுவதற்கு நீதித்துறை நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிடுமாறு வழக்குரைஞரும் பாஜக நிா்வாகியுமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘தற்போதைய குற்றவியல் சட்டம் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை. எனவே, சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இது தொடா்பாக இந்திய சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஊழல் உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள சட்டங்களை முழுமையாக ஆராய்ந்து விரிவான புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

‘ஒரே நாடு; ஒரே குற்றவியல் சட்டம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும். அச்சட்டத்தில் லஞ்சம், நிதி மோசடி, கருப்புப் பணம், ஊழல், பதுக்கல், கள்ள சந்தை, போதைப் பொருள் கடத்தல், கலப்படம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கான விரிவான தண்டனை விவரங்களைத் தனித்தனி அத்தியாயங்களாக அமைக்க வேண்டும்.

அச்சட்டத்தை இயற்ற புதிய ஆணையத்தையோ, நிபுணா்கள் குழுவையோ அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். புதிய வரைவு சட்டத்தை 6 மாதங்களுக்குள் வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com