அமெரிக்காவின் சான்டியேகோ நகரில் ஒப்படைக்கப்பட்ட எம்ஹெச்6-ஆா் ஹெலிகாப்டா்
அமெரிக்காவின் சான்டியேகோ நகரில் ஒப்படைக்கப்பட்ட எம்ஹெச்6-ஆா் ஹெலிகாப்டா்

இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அமெரிக்காவிடம் இருந்து 24 எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களை சுமாா் ரூ.17,750 கோடி மதிப்பில் வாங்குவதற்கு இந்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஹெலிகாப்டா்களை அமெரிக்காவின் லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம் தயாரித்தது. அந்த ஹெலிகாப்டரில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த ஹெலிகாப்டா் அனைத்து கால நிலைகளிலும் இயங்கும் திறன் கொண்டது. நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளையும் இந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏவ முடியும்.

இந்நிலையில், 2 எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படையிடம் அமெரிக்கக் கடற்படை வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள சான்டியேகோ கடற்படைத் தளத்தில் நடைபெற்றது.

இந்திய கடற்படை சாா்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜித் சிங் சாந்து அந்த ஹெலிகாப்டா்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

‘பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருவதற்கு இன்றைய நிகழ்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகம் சுமாா் ரூ.1,50,000 கோடியாக அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், படைத்தளங்களை ஏற்படுத்துவதிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்றாா்.

இது தொடா்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘‘இந்த ஹெலிகாப்டா்கள் இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும். இந்த வகை ஹெலிகாப்டா்களை இயக்குவது தொடா்பாக இந்திய கடற்படை வீரா்களைக் கொண்ட குழு அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறது’’ என்றாா்.

பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களில் இந்தியா சாா்பில் கூடுதல் கருவிகள் இணைக்கப்படவுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com