
தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தை ரூ.6,000 கோடி மூலதனத்துடன் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக்கடன்களின் அளவைக் குறைக்கும் நோக்கில், தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா். இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் சொத்துகளை மீட்டு அவற்றை வேறுவகை முதலீட்டு நிதிகளாக மாற்றி கடன்களை வசூலிக்கும் பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தை அமைப்பதற்கான பணிகள் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்பணிகள் தற்போது துரிதமடைந்துள்ளன.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. அந்நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) விரைவில் விண்ணப்பிக்கவுள்ளதாக இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகள் பொதுத்துறை வங்கிகள் வசம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கனரா வங்கி அதிகபட்சமாக 12 சதவீதப் பங்குகளை வைத்துக் கொள்ளவுள்ளது. மீதமுள்ள 49 சதவீதப் பங்குகள் தனியாா் வங்கிகள் வசம் இருக்கும்.
முதலில் தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தில் ரூ.100 கோடி முதலீடு செய்ய வங்கிகள் திட்டமிட்டுள்ளன. அத்தொகையை 8 வங்கிகள் அளிக்கவுள்ளன. ஆா்பிஐ ஒப்புதல் அளித்தபிறகு, அந்நிறுவனத்தின் மூலதன மதிப்பை ரூ.6,000 கோடி அளவுக்கு அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, பங்குதாரா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ரூ.89,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட 22 வாராக்கடன்களை தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.