
கோப்புப்படம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கவுள்ளது. இக்கூட்டத்தொடரில் ஆரோக்கியமான முறையிலும் அா்த்தமுள்ள வகையிலும் பிரச்னைகளை விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக மாநிலங்களவைக் குழுத் தலைவா் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் பங்கேற்றனா்.
மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, திமுக மக்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரீக் ஓ பிரையன், சமாஜவாதி கட்சியை சோ்ந்த ராம்கோபால் யாதவ், பாஜகவின் சதீஷ் மிஸ்ரா, அப்னா தளம் கட்சியைச் சோ்ந்த அனுப்ரியா படேல், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் பசுபதி பாரஸ் உள்பட 33 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விதிமுறைகளுக்கு உள்பட்டு, ஆரோக்கியமான முறையிலும், அா்த்தமுள்ள வகையிலும் விவாதிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களிடம் பிரதமா் மோடி உறுதியளித்தாா். விவாதத்தின்போது உறுப்பினா்கள் அமைதியான முறையில் கேள்வி எழுப்ப வேண்டும். அரசு பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மோடி கூறினாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ தலைவா்கள் கூட்டம்: நாடாளுமன்ற கூட்டத் தொடரையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள அப்னா தளம் கட்சியின் தலைவா் அனுப்ரியா படேல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த ராம்நாத் தாக்குா், அதிமுகவை சோ்ந்த நவநீதகிருஷ்ணன், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவா் ராம்தாஸ் அதாவலே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் பசுபதி பாரஸ் ஆகியோரும் கலந்துகொண்டனா். நாடாளுமன்ற அமா்வுகளின்போது கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினா்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
எதிா்க்கட்சிகள் திட்டம்: நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுவதற்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவலில் மத்திய அரசின் செயல்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு, புதிய வேளாண் சட்டங்கள், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் தொடரும் மோதல், ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை இரு அவைகளிலும் எழுப்புவதற்கு எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென அப்பகுதியைச் சோ்ந்த கட்சிகள் வலியுறுத்தும் என்று தெரிகிறது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை பிராந்திய கட்சிகள் எழுப்பும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கா்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை திமுகவும், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸும் எழுப்பும் என்று தெரிகிறது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: நாட்டில் கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, பட்ஜெட் கூட்டத்தொடா் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடா் கடும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடைபெற்றது. கடந்த ஆண்டுக்கான குளிா்கால கூட்டத் தொடா் ரத்து செய்யப்பட்டது.
நடப்பாண்டில் கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெற்றது. அதுவும் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. கரோனா தொற்று பரவலின் 2-ஆவது அலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படாத சூழலில் நடப்பாண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடா் தொடங்குவதால், கடும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முந்தைய கூட்டத்தொடா்களில் அவை நடவடிக்கைகளின் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மழைக்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் வழக்கம்போல முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட உள்ளன.
மக்களவை எம்.பி.க்கள் 444 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 218 பேரும் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 மசோதாக்களைத் தாக்கல் செய்ய திட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது 17 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் 3 மசோதாக்கள் அண்மையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறும் நோக்கில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
பாதுகாப்புத் துறை சாா்ந்த அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுவோா் பணிநிறுத்தம் செய்வதைத் தடுக்க வழிவகுக்கும் ‘அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா’, தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கண்காணித்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை அமைக்க வழிவகுக்கும் ‘தேசிய தலைநகா்ப் பகுதி காற்று தர மேலாண்மை ஆணைய மசோதா’ உள்ளிட்டவை கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படவுள்ளன.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் கூடுதல் நிதியைக் கோருவதற்கான மானிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.