நாட்டின் வளர்ச்சிப் பாதையை தடம்புரளச் செய்ய முடியாது: ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அமித் ஷா

சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் தடங்கல் உண்டாக்குபவர்களின் சதித் திட்டத்தால் நாட்டின் வளர்ச்சிப் பாதையை தடம்புரளச் செய்ய முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் தடங்கல் உண்டாக்குபவர்களின் சதித் திட்டத்தால் நாட்டின் வளர்ச்சிப் பாதையை தடம்புரளச் செய்ய முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி வயர் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. அதேசமயம், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்க இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியது. மத்திய அரசு தரப்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமித் ஷா இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது:

"சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் தடங்கல் உண்டாக்குபவர்களின் சதித் திட்டத்தால் நாட்டின் வளர்ச்சிப் பாதையை தடம்புரளச் செய்ய முடியாது. மழைக்காலக் கூட்டத் தொடர் முன்னேற்றத்துக்கான புதிய பலன்களைத் தரவுள்ளது.

நிகழ்வுகளின் உண்மைத்தன்மை மற்றும் தொடர்ச்சிகளையும் ஒட்டுமொத்த நாடு கவனிக்க வேண்டும். இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றார்போல நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியானது. உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காக மட்டுமே சில குழுக்களால் அது பெரிதாக்கப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடர் மீது மக்களுக்கு நிறைய நம்பிக்கைகள் உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பினரின் நலனுக்காக முக்கிய மசோதாக்கள் மீதான விவாதங்கள் காத்திருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்பு பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சிலரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. நாட்டின் முன்னேற்றத்தை தடம்புரளச் செய்வதுதான் அவர்களுக்கு எப்போதுமே விருப்பம்.

நாடாளுமன்றத்தில் முன்னேற்றுத்துக்கான எது வந்தாலும், அதை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. 

இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாது சீர்குலைக்க நினைப்பவர்கள் உலகளாவிய அமைப்புகள். இந்தியா முன்னேறிவிடக் கூடாது என தடங்கள் உண்டாக்குபவர்கள் நாட்டின் அரசியல்வாதிகள்.

இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சிகளையும், தொடர்புகளையும் நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

நாட்டு நலனுக்குதான் முன்னுரிமை என்பதில் மோடி அரசு தெளிவாக இருப்பதை மக்களிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். என்ன நடந்தாலும் அந்த இலக்கை நோக்கி செயல்பட்டுக்கொண்டே இருப்போம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com