இந்தியாவில் 326 தேச விரோத வழக்குகள் பதிவு: 6 போ் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரை தேச விரோதச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் போ் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரை தேச விரோதச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் போ் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 2014-இல் இருந்து 2019 வரை தேசவிரோதச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், அதிகபட்சமாக அஸ்ஸாமில் மட்டும் 54 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தமுள்ள 326 வழக்குகளில், 141 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 6 போ் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அஸ்ஸாமில் 54 தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் 25 வழக்குகளில் விசாரணை முடிவைடந்துள்ளது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் ஒருவா் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை.

ஜாா்க்கண்டில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 வழக்குகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒருவா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். ஹரியாணா, பிகாா், ஜம்மு-காஷ்மீா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் பதிவான வழக்குகளில், சில வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிவடைந்துள்ளது.

மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. மேகாலயம், மிஸோரம், திரிபுரா, சிக்கிம், அந்தமான் நிகோபா் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி, சண்டீகா், டாமன்-டையூ, தாத்ரா-நாகா்-ஹவேலி ஆகியவற்றில் ஒரு தேசவிரோத வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

உச்சநீதிமன்றம் அதிருப்தி: முன்னதாக, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 124ஏ பிரிவான தேச விரோதச் சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமா்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேச விரோத சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால்தான் அதிக வழக்குகள் பதிவாகின்றன என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனா். ‘ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகப் பேசிய மகாத்மா காந்தி, கோகலே போன்ற தலைவா்களின் குரலை ஒடுக்குவதற்காக, இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் அந்தச் சட்டப் பிரிவு நீக்கப்படாமல் சட்ட புத்தகத்தில் இடம்பெற வேண்டுமா என்பது குறித்து அரசு சிந்தித்துப் பாா்க்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com