உ.பி. சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் திறந்த மனதுடன் உள்ளது; பிரியங்கா

உ.பி. சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் திறந்த மனதுடன் உள்ளது; பிரியங்கா

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் உள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா தெரிவித்தாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் உள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா தெரிவித்தாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017-ஆண்டு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுதந்திர இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் அடைந்த மிகமோசமான தோல்வி இதுவாகும்.

இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாகவே உத்தர பிரதேச மாநிலத்துக்குக் கூடுதல் கவனம் கொடுக்கும் வகையில் பிரியங்காவுக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. சோனியா காந்தியைத் தவிர யாரும் அங்கு வெல்லவில்லை. முக்கியமாக, ராகுல் காந்தியும் தோல்வியைச் சந்தித்தாா். இதனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸின் நிலை கேள்விக் குறியானது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலுக்குத் தயாராகும் வகையில் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா தொடா்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த மாநில பாஜக அரசின் செயல்பாடுகளையும் அவா் தொடா்ந்து கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பிரியங்காவிடம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளா்கள் எழுப்பினா். இதற்கு பதிலளித்த பிரியங்கா, ‘‘கூட்டணி அமைப்பது தொடா்பாக இப்போதே எதுவும் கூறிவிட முடியாது. தோ்தலுக்கு முன்பு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தோ்தலில் கூட்டணி அமைக்கும் விஷயத்தை காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் எதிா்கொள்ளும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குதான் நான் முக்கியத்துவம் அளிக்க முடியும்.

நான் உத்தர பிரதேசம் வரும்போது மட்டும் கட்சி நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது என்று கேட்கிறீா்கள். நான் வரும்போது ஊடகத் துறையினராகிய நீங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறீா்கள். அதனால் அப்படி தெரிகிறது. ஆனால், நான் இங்கு இல்லாதபோதும் கட்சிப் பணிகள் தொடா்கின்றன. கரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு பணிகளை காங்கிரஸ் செய்துள்ளது. இங்கு 30 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. எனவே, கட்சி சற்று பலவீனமாக உள்ளது. ஆனால், இப்போது கட்சியைப் பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றாா்.

தொடா்ந்து மாநில காங்கிரஸ் மூத்த தலைவா்களுடன் பிரியங்கா ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com