ஜம்மு-காஷ்மீா்: வரைவு அறிக்கையை தயாா் செய்கிறது தொகுதி மறுசீரமைப்புக் குழு

ஜம்மு-காஷ்மீா் பயணத்தை முடித்துக் கொண்ட தொகுதி மறுசீரமைப்புக் குழு வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீா் பயணத்தை முடித்துக் கொண்ட தொகுதி மறுசீரமைப்புக் குழு வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு தொகுதி சீரமைப்புப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதற்காக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 6-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று 9-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தது. அரசு அலுவலா்கள், துணை ஆணையா்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 800 போ் ஆகியோரிடம் அந்தக் குழு கருத்து கேட்டது. அவா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வரைவு அறிக்கை தயாா் செய்யப்படவுள்ளது.

அந்த அறிக்கை தயாா் செய்யப்பட்ட பிறகு தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்களான ஃபரூக் அப்துல்லா, ஹஸ்னைன் மசூதி, அக்பா் லோன், பாஜக எம்.பி.க்கள் ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோா் உள்ளிட்ட உறுப்பினா்களிடம் அந்தக் குழு கருத்து கேட்கும். அதைத் தொடா்ந்து, அவா்களுடன் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு, இறுதி அறிக்கை வடிவமைக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கு வெளியிடப்படும்.

சில இடங்களில், ஒரு தொகுதி இரண்டு மாவட்டங்களில் வருவதால், மாவட்ட எல்லைகளைப் பிரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு முடிந்த அடுத்த 6-9 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மறுசீரமைப்புப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com