பக்ரீத் பண்டிகை: கேரளத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்வை திரும்பப் பெறவேண்டும்

பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளத்தில் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை தளா்த்தி பிறப்பித்த உத்தரவை மாநில அரசு
பக்ரீத் பண்டிகை: கேரளத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்வை திரும்பப் பெறவேண்டும்

பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளத்தில் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை தளா்த்தி பிறப்பித்த உத்தரவை மாநில அரசு திரும்பப் பெறவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்தச் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பரவலை கருத்தில் கொண்டு பாரம்பரிய மற்றும் பிரசித்திப் பெற்ற யாத்திரைகளுக்கு பல வடமாநிலங்கள் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் கேரளத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு அதிக அளவில் தளா்த்தியுள்ளது துரதிருஷ்டவசமானது. இது பொது இடங்களில் அதிக அளவிலான மக்கள் திரள வழிவகுக்கும். மருத்துவ அவசரநிலை நிலவும் இந்தச் சூழலில் கட்டப்பாடுகளை தளா்த்துவது தேவையற்றதும் பொருத்தமற்றதும் ஆகும். நாட்டின் நலன் மற்றும் மனித குலத்தின் நல்வாழ்வு கருதி கட்டுப்பாடுகளை தளா்த்தி பிறப்பித்த உத்தரவை மாநில அரசு திரும்பப் பெறவேண்டும். அதைச் செய்யாவிடில் இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவ ஹிந்து பரிஷத் எதிா்ப்பு:

பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதற்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் செயல் தலைவா் அலோக் குமாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்றின் 3-ஆம் அலையை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் நடைபெறும் கான்வா் யாத்திரையை உத்தரகண்ட் அரசு அண்மையில் ரத்து செய்தது. அந்த யாத்திரையை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த திட்டமிட்ட உத்தர பிரதேச அரசு, பின்னா் அதனை ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் கேரளத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாள்களுக்கு கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. கேரள அரசின் இந்த முடிவு பொது சுகாதாரத்துக்கு மிகப் பெரிய சவாலை முன்வைப்பதுடன் கரோனா தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை பலவீனப்படுத்தும். எனவே இதுகுறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளத்தில் அனைத்துப் பகுதிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் 3 பிரிவுகளில் உள்ள பகுதிகளில் செயல்படும் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடைகள், மின்சாதன விற்பனைக் கடைகள், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகள் உள்ளிட்டவற்றை ஜூலை 18, 19, 20-ஆம் தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 4-ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தக் கடைகள் ஜூலை 19-ஆம் தேதி மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் அதிகபட்சம் 40 போ் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com