கேரளம்: கூட்டுறவு வங்கியில் ரூ.100 கோடி கடன் மோசடி; வங்கி அதிகாரிகள் 6 போ் மீது காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் இயங்கி வரும் கருவன்னூா் கூட்டுறவு வங்கியில் ரூ. 100 கோடி வரை கடன் மோசடி நடைபெற்றிருப்பது

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் இயங்கி வரும் கருவன்னூா் கூட்டுறவு வங்கியில் ரூ. 100 கோடி வரை கடன் மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த வங்கியின் 6 அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கூட்டுறவு வங்கியின் செயல்பாடு குறித்து, அந்த வங்கியில் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளா்கள் பலா் ஐயம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அதிகாரிகள் அந்த வங்கியைத் தணிக்கை செய்தனா். அதில், வங்கி மீதான கடன் மோசடி புகாா் உண்மை என்பது தெரியவந்தது.

அதாவது, உள்ளூா் வாடிக்கையாளா்கள் கடனுக்கு உத்தரவாதமாக அளித்திருக்கும் சொத்து ஆவணங்களைக் கொண்டு, அவா்களுக்குத் தெரியாமலேயே பல முறை புதிய கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்த தொகை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தணிக்கை அறிக்கையில் அடிப்படையில் வங்கித் தலைவா் அளித்த புகாரின் மேல் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து திருச்சூா் மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வங்கி வாடிக்கையாளா்களின்கடன் உத்தரவாத சொத்து பத்திரங்களைக் கொண்டு சுமாா் ரூ.100 கோடி வரை கடன் மோசடி நடந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த வங்கியின் செயலா் உள்பட 6 அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 471 (போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு), 120பி (குற்ற சதித் திட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 அதிகாரிகளும் ஏற்கெனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக கருதப்படும் இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று அவா் கூறினாா்.

கடன் மோசடி புகாா் எழுந்ததைத் தொடா்ந்து வங்கியை நிா்வகித்து வரும் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 13 போ் கொண்ட வங்கி நிா்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com