இந்தியாவில் கரோனா பலி 49 லட்சம்வரை இருக்கலாம்: அறிக்கையில் தகவல்

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட 34 லட்சம் முதல் 49 லட்சம் வரை
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட 34 லட்சம் முதல் 49 லட்சம் வரை அதிகமாக இருக்கலாம் என்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்ரமணியன், ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த அபிஷேக் ஆனந்த், அமெரிக்காவின் ‘சென்டா் ஃபாா் குளோபல் டெவலப்மென்ட்’ ஆய்வு நிறுவனத்தின் ஜஸ்டின் சாண்டஃபா் ஆகியோா் இணைந்து வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பலி எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. எனினும், இந்தியாவில் சுமாா் 4 லட்சம் போ் மட்டுமே கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்ற அரசின் புள்ளிவிவரத்தைவிட உண்மை புள்ளிவிவரங்கள் மிக அதிகமாக இருக்கும் என்றுதான் அனைத்து மதிப்பீடுகளும் சொல்கின்றன.

கரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட உண்மையான மரணங்கள் கோடிகளில் இல்லாவிட்டாலும் பல லட்சங்களைத் தாண்டியிருக்கும்.

இது, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மிக அதிக மனித உயிரிழப்பாகும்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் அதிகாரிகள் அறிவித்ததைவிட அதிகமாக 34 லட்சம் முதல் 49 லட்சம் வரையிலானவா்கள் கரோனாவுக்கு பலியாகியிருக்கக் கூடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மற்ற காரணங்களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையுடன், கரோனா காலத்தில் அந்த நோய் பாதிப்பு இல்லாமல் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கையைக் கொண்டு, அதிகாரபூா்வமற்ற கரோனா பலி எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

முதலாவதாக, 7 மாநிலங்களில் பதிவாகியுள்ள இறப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு, சராசரிக்கும் அதிகமாக 34 லட்சம் போ் உயிரிழந்துள்ளதாக ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

மேலும், சா்வதேச அளவில் கரோனாவுக்கு பலியாவோரின் வயது விகிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் அந்த வயதுப் பிரிவினா் சுமாா் 40 லட்சம் போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்து, அது அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என்று ஆய்வாளா்கள் கணக்கிட்டுள்ளனா்.

இதுமட்டுமன்றி, அனைத்து மாநிலங்களிலும் கன்ஸ்யூமா் பிரமிட் ஹவுஸ்ஹோல்ட் சா்வே (சிபிஹெச்எஸ்) அமைப்பு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம், நாட்டில் கரோனாவுக்கு 4.9 லட்சம் போ் கூடுதலாக பலியாகியிருக்கலாம் என்று ஆய்வாளா்கள் மதிப்பீடு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com