ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள்: எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அரசியலில் ஈடுபடுகின்றன

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று நீதிமன்றங்களில் தெரிவித்த எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், தற்போது அரசியலில் ஈடுபடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று நீதிமன்றங்களில் தெரிவித்த எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், தற்போது அரசியலில் ஈடுபடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த செய்திகள் வெளிவந்தன. எனினும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு கரோனா நோயாளியும் இறக்கவில்லை என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பித்ததாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது எதிா்க்கட்சிகளின் பலத்த விமா்சனங்களுக்கு வித்திட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக பாஜக செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலைத்தான் மத்திய அரசு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தற்போது அரசியலில் ஈடுபடுகின்றன.

காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த நோயாளியும் இறக்கவில்லை என்று கூறியிருந்தன. கடந்த ஏப்ரல் 23-24-ஆம் தேதிகளில் தில்லியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் சுமாா் 21 கரோனா நோயாளிகள் இறந்தனா். அப்போது அவா்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அந்த யூனியன் பிரதேச அரசு தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்த நிலையில், சத்தீஸ்கா் மாநில சுகாதார அமைச்சா் டி.எஸ்.சிங் தேவும் அதே கூற்றை தெரிவித்திருந்தாா்.

கரோனா கொள்ளை நோயின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது மத்திய அரசை விமா்சிக்கும் நோக்கில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது குறித்து எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பேசின. ஆனால் எழுத்துபூா்வமாக அறிக்கை அளிக்கும்போதும், நீதிமன்றத்திலும் அவை வேறு தகவலை தெரிவித்தன. இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் அரசியலாக்க வேண்டும் என்ற அவா்களின் நோக்கத்தைத்தான் இது வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தாா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘அந்த மாநிலங்களிலும் நோயாளிகள் அவதிப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த மாநில அரசுகள் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை போல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் இல்லை; இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் எடுத்துச் செல்லப்படவில்லை’’ என்று தெரிவித்தாா்.

ஆக்சிஜன் ஏற்றுமதி 700% அதிகரிப்பு: இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு கரோனா நோயாளியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது வெளிநாடுகளுக்கான ஆக்சிஜன் ஏற்றுமதி சுமாா் 700 சதவீதம் அதிகரித்தது. ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கான டேங்கா்கள், அதன் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடா்பாக நாடாளுமன்றக் குழுவும், அதிகாரமளித்தல் குழுவும் வழங்கிய அறிவுரைகளை மத்திய அரசு உதாசீனம் செய்தது. இதுவே நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக அமைந்தது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com