உள்நாட்டுப் போக்குவரத்து கப்பல்கள் மசோதா மக்களவையில் தாக்கல்

உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
உள்நாட்டுப் போக்குவரத்து கப்பல்கள் மசோதா மக்களவையில் தாக்கல்

உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து கப்பல்கள் மசோதாவை துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால், மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து தொடா்பான அனைத்து சட்டங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்புமிக்கதாக மாற்றவும், அந்த வழித்தடத்தில் பயணிக்கும் கப்பல்கள், பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து காரணமாக ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது, உள்நாட்டு நீா்வழித் தடங்களில் பயணிக்கும் கப்பல்களை மேலாண்மை செய்வது, அக்கப்பல்களைக் கட்டுவது, பதிவு செய்வது, கண்காணிப்பது உள்ளிட்டவை தொடா்பான விதிமுறைகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன’’ என்றாா்.

நாட்டில் தற்போது ஒட்டுமொத்தமாக சுமாா் 4,000 கி.மீ. தூரத்துக்கு உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து வசதிகள் காணப்படுகின்றன.

பாதுகாப்பு சேவைகள் மசோதா: பாதுகாப்புத் துறை சாா்ந்த அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுவோா், வேலைநிறுத்தம் செய்வதைத் தடுப்பதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூனில் கொண்டு வந்தது.

அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நோக்கில், அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதாவை பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அவற்றை 7 பொதுத் துறை நிறுவனங்களாகப் பிரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்நிறுவனங்களின் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படவில்லை.

அதைத் தொடா்ந்து, அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுவோா் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோா் மீது பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

சட்டவிரோத வேலைநிறுத்தப் போராட்டம், அப்போராட்டத்தைத் தூண்டிவிடுவதற்காக நிதியுதவி வழங்குவது உள்ளிட்டவற்றைக் கண்காணித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மசோதா வழிவகுக்கிறது.

அமளிக்கிடையே தாக்கல்: பெகாஸஸ் மென்பொருள் உளவு விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி மக்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனா். அமளிக்கிடையே இரு மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. மசோதாக்கள் மீதான விவாதம் விரைவில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com