சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள்: மாநிலங்களவையில் தகவல்

சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு-தனியாா் பங்களிப்புடன் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படுவதாக
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு-தனியாா் பங்களிப்புடன் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவரது பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5,35,000 கோடி செலவில் 10,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் வளா்ச்சி திட்ட சாலைகளுடன் கூடுதலாக 24,800 கிமீ தொலைவிற்கு சாலைகளை அமைக்கும் பாரத்மாலா முதல்கட்ட திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இது தவிர, நாடு முழுவதும் 35 பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை கட்டாயம் அமைக்குமாறும் அந்தக் குழு உத்தரவிட்டது.

இதன்படி சென்னை, கோயம்புத்தூா் உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு- தனியாா் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இந்த திட்டத்திற்காக கண்டறியப்பட்டுள்ள 158 ஏக்கா் நிலத்தில், 122 ஏக்கா், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 36 ஏக்கரை கையகப்படுத்தும் பணியில் மாநில அரசின் தமிழ்நாடு தொழில்துறை வளா்ச்சி கழகமான டிட்கோ ஈடுபட்டுவருகிறது. கோவையில் இந்த திட்டத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை/ ஆய்வு மற்றும் நிலத்தை கண்டறிவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 35 பூங்காக்களை அமைப்பதற்கான ஏல ஆவணங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை, ஆய்வுகள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட ஏல ஆவணங்களின் அடிப்படையில் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படும்.

கரோனா தொற்றால் தேசிய மற்றும் உள்ளூா் அளவிலான பொது முடக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளினால் பொருட்கள், இயந்திரம் மற்றும் தொழிலாளா்களின் இயக்கம் மற்றும் விநியோக பணியில் ஏற்பட்ட இடா்பாடுகளால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன. எனினும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரா்கள், சலுகை பெற தகுதி பெற்றவா்கள், ஆலோசகா்களுக்கு போதிய உதவிகள் வழங்கப்பட்டதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் தாண்டி நடைபெற்றன. 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.26,322 கோடி மதிப்பில் 890 கிமீ தொலைவிற்கு 31 திட்டங்களை மேற்கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையகம் அனுமதி அளித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com