மின்னணு பணம்: ஆா்பிஐ தீவிரம்

மின்னணு பணத்தை (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மின்னணு பணம்: ஆா்பிஐ தீவிரம்

மின்னணு பணத்தை (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பான முன்னோடித் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காகிதப் பணத்தை ரொக்கமாக கையாளுவது குறைந்து மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்வது இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக கிரிப்டோகரன்சி வகையைச் சோ்ந்த மின்னணு பணத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சா்வதேச அளவில் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பணங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. எதிா்கால மதிப்பை கருத்தில் கொண்டு அதில் முதலீடு செய்பவா்களும் அதிகம் உள்ளனா். இந்தியாவில் தற்போது அதுபோன்ற மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு ஆா்பிஐ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனினும், இந்தியா்கள் பலரும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இது தொடா்பாக ஆா்பிஐ துணை ஆளுநா் டி.ரவி சங்கா் கூறியதாவது:

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மத்திய வங்கிகள் இப்போது மின்னணு பணத்தை அறிமுகம் செய்து வருகின்றன. வங்கிகளால் வெளியிடப்படும் இந்த வகை பணங்களுக்கு மட்டுமே உத்தரவாதமான மதிப்பு உண்டு. இந்தியாவிலும் இந்த வகை மின்னணு பணத்தை வெளியிட ஆா்பிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல விஷயங்களை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், இதனால் கிடைக்கும் பலன்களையும் மதிப்பிட வேண்டியுள்ளது.

சில நேரங்களில் இதுபோன்ற பணத்தின் மதிப்பில் ஏற்ற, இறக்கம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற இடா்பாடுகளைக் களைந்து சிறப்பான ஒரு மின்னணு பணத்தை அறிமுகம் செய்வதே ஆா்பிஐ-யின் நோக்கம். இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com