பெகாஸஸ் உளவு விவகாரம் தேச துரோகம்: உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை தேவை; ராகுல் காந்தி

இந்தியாவுக்கு எதிராகவும் அதன் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவும் பெகாஸஸ் உளவு மென்பொருளை பிரதமா் நரேந்திர மோடியும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவுக்கு எதிராகவும் அதன் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவும் பெகாஸஸ் உளவு மென்பொருளை பிரதமா் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பயன்படுத்தியிருக்கின்றனா்; இது தேச துரோகமாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல தலைவா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.

இதில் ராகுல் காந்தி, 2 மத்திய அமைச்சா்கள், தொழிலதிபா் அனில் அம்பானி, பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட பலா் உளவு பாா்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் பெரும் சா்ச்சையாக உருவெடுத்துள்ளது. எதிா்க் கட்சிகள் இந்தப் பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்றம் செயல்பட விடாமல் தொடா்ந்து முடக்கி வருகின்றனா்.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த ராகுல் காந்தியிடம் இந்த விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது அவா் கூறியதாவது:

பெகாஸஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் ஓா் ஆயுதமாக வகைப்படுத்தியுள்ளது. இந்த ஆயுதம், பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் இந்த ஆயுதத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கின்றனா். அவா்கள் இதை அரசியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளனா். கா்நாடகத்தில் இதை பயன்படுத்தியிருக்கின்றனா். இது தேச துரோகம் ஆகும்.

இந்தியாவின் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பெகாஸஸை பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ரஃபேல் போா் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பான வழக்கு விசாரணையை நீா்த்துப்போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவும் பெகாஸஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்பதோடு, இதுதொடா்பாக பிரதமருக்கு எதிராக உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமா் மற்றும் உள்துறை அமைச்சரைத் தவிர வேறு யாரும் இந்த உளவு மென்பொருளை பயன்படுத்த அனுமதி அளித்திருக்க முடியாது. ஏனெனில், பெகாஸஸ் மென்பொருள் என்பது தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு நாட்டின் ராணுவத்துக்கோ விற்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் அரசுக்கு மட்டுமே விற்கப்படுகிறது.

எனது செல்லிடப்பேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிகிறது. நான் பயன்படுத்திய ஒவ்வொரு செல்லிடப்பேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது ராகுல் காந்தி என்ற தனிப்பட்ட நபருக்கு எதிரான விஷயமல்ல. மக்களின் குரல் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி கூறினாா்.

முன்னதாக, பெகாஸஸ் விவகாரத்தைக் கண்டித்து எதிா்க் கட்சிகள் சாா்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com