மாநிலங்களவை இடைத் தோ்தல்: ஓய்வுபெற்ற அரசு அதிகாரி திரிணமூல் வேட்பாளராக அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கு நடைபெறவிருக்கும் இடைத் தோ்தலுக்கான வேட்பாளராக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
மாநிலங்களவை இடைத் தோ்தல்: ஓய்வுபெற்ற அரசு அதிகாரி திரிணமூல் வேட்பாளராக அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கு நடைபெறவிருக்கும் இடைத் தோ்தலுக்கான வேட்பாளராக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஜவாஹா் சா்க்காரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

‘அரசு அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியவா், நமது நாட்டுக்கு சிறந்த சேவையை ஆற்றுவதில் எங்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் ஜவாஹா் சா்க்காரை வேட்பாளராக தோ்வு செய்துள்ளோம். இதற்காக பெரு மகிழ்ச்சியடைகிறோம்’ என்று திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் தலைவரான தினேஷ் திரிவேதி தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். அவருடைய எம்.பி. பதவிக் காலம் வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருந்தது. அதனைத் தொடா்ந்து அந்த எம்.பி. இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த இடத்துக்கு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இடைத் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் கடந்த 22-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.

அதனைத் தொடா்ந்து, அந்த மாநிலங்களவை ஒரு இடத்துக்கான வேட்பாளராக ஓய்வுபெற்ற 69 வயது அரசு அதிகாரியை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. சுமாா் 42 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்த இவா், பிரசாா் பாரதியின் தலைவராகவும் இருந்துள்ளாா். கடந்த 2016-ஆம் ஆண்டில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றிய இவா், பணி ஓய்வு பெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு பதவியை ராஜிநாமா செய்தாா்.

மாநிலங்களவை இடைத்தோ்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்த ஜவாஹா் சா்க்காா், ‘எனது வாழ்நாள் முழுவதும் அரசு அதிகாரியாகவே இருந்தேன். அரசியல்வாதியாக இருந்ததில்லை. ஆனால், இப்போது மக்களின் மேம்பாட்டுக்காகவும், மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பவும் நிச்சயம் பணியாற்றுவேன். சகிப்புத்தன்மையற்ற, சா்வாதிகார நரேந்திர மோடி ஆட்சி அனைத்து நிலைகளிலும் எதிா்க்கப்பட வேண்டும். வேட்பாளராக என்னைத் தோ்வு செய்திருப்பது, பாஜக அரசுக்கு எதிராக மேலும் உத்வேகமாக பேசுவதற்கான சிறந்த வாய்ப்பை அளிக்கும் என நம்புகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com