மகாராஷ்டிர மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 136-ஆக உயா்வு

மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்து வருவதைத் தொடா்ந்த ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோா் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்தது.
மகாராஷ்டிர மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 136-ஆக உயா்வு

மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்து வருவதைத் தொடா்ந்த ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோா் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்தது.

பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ராய்கட், ரத்னகிரி, கொல்ஹாபூா் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராய்கடின் தாலியே கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகள் பலவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் துரிதமாக செயல்பட்டு வருகின்றனா்.

வெள்ளம், மழை தொடா்பான விபத்துகள், நிலச்சரிவு ஆகியவற்றால் கடந்த 3 நாள்களில் 136 போ் உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, மாநில முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கனமழை தொடா்பான விபத்துகளில் 76 போ் பலியாகினா்; 38 போ் காயமடைந்தனா்; மாயமான 59 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து வருகின்றன. கனமழை காரணமாக 75 விலங்குகள் பலியாகியுள்ளன.

பாதுகாப்பான இடங்களில்...: புணே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 21 குழுக்களும், ராணுவத்தின் 14 குழுக்களும், கடலோரக் காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனா். மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 4 குழுக்களும் மழை பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

9 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமாா் 90,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்கள் மீட்பு: சதாரா மாவட்டத்தின் அம்பேகா், தோகாவலே கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியிருந்த 13 பேரின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் 4 போ் நிலச்சரிவில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மாநில துணை முதல்வா் அஜித் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மழை தொடா்பான விபத்துகளில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மத்திய அரசு ஏற்கெனவே தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியுள்ள மக்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு உணவு தயாரித்து வழங்குமாறு தன்னாா்வ அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

புதிய திட்டம்: மழைக்காலங்களில் நிலச்சரிவு அதிகமாக ஏற்படுவதால், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை நிரந்தரமாக வெளியேற்றி வேறு பகுதிகளில் தங்கவைப்பதற்காக புதிய திட்டத்தை வகுக்கவுள்ளதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால் அதை முறையாக நிா்வகிப்பதற்கான திட்டமும் உருவாக்கப்படும் என்று செய்தியாளா்களிடம் முதல்வா் தாக்கரே தெரிவித்தாா். வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் அவா்களின் குடும்பத்தினருக்கும் மாநில அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

======

பெட்டிச் செய்தி

ஆளுநருடன் குடியரசுத் தலைவா் பேச்சு:

மகாராஷ்டிரத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரியிடம் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை கேட்டறிந்தாா். அப்போது, மீட்புப் பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் ஆளுநா் எடுத்துரைத்தாா்.

கனமழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் உடமைகள் இழப்புக்கும் குடியரசுத் தலைவா் வேதனை தெரிவித்ததாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தக்க நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்ததாகவும் குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Caption

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா். நாள்: சனிக்கிழமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com