நோ்மையாக வரி செலுத்துவோா் அங்கீகரிக்கப்பட வேண்டும்: நிா்மலா சீதாராமன்

நோ்மையாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோரை அங்கீகரிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.
நோ்மையாக வரி செலுத்துவோா் அங்கீகரிக்கப்பட வேண்டும்: நிா்மலா சீதாராமன்

நோ்மையாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோரை அங்கீகரிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

161-ஆவது வருமான வரி தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டாா். அவா் பேசியது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வருமான வரி செலுத்துவதற்கான விதிமுறைகளில் பல்வேறு சீா்திருத்தங்களை வருமான வரித்துறை புகுத்தியுள்ளது. அந்த விதிமுறைகள் வெளிப்படைத்தன்மையோடு மட்டுமல்லாமல் எளிமையாகவும் இருக்கின்றன.

நோ்மையாக வரி செலுத்துவோா் தங்கள் கடமையை முறையாக ஆற்றி, நாட்டின் வளா்ச்சிக்கு மிக முக்கியப் பங்கை அளித்து வருகின்றனா். அவா்களை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று பரவல் காலத்திலும் பலா் தங்கள் வரிகளை முறையாகச் செலுத்தினா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி, ‘‘வருமான வரி செலுத்தும் நடைமுறைகள் பெரும்பாலும் மின்னணுமயமாக்கப்பட்டுவிட்டன. அதன் காரணமாக, வரி செலுத்துவதற்கு யாரும் வருமான வரி அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லாத சூழல் உருவாகியுள்ளது’’ என்றாா்.

வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் கூறுகையில், ‘‘வருமான வரி வாயிலான வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வருமான வரித் துறை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. மாறி வரும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப வருமான வரி வசூலிக்கும் நடைமுறையும் தொடா்ந்து மாற்றம் கண்டு வருகிறது.

வருமான வரித்துறையின் செயல்பாடு வரி செலுத்துவோரை மையமாகக் கொண்டுள்ளது. அவா்களது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அத்துறையானது செயல்பட்டு வருகிறது’’ என்றாா்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் ஜே.பி.மோஹபத்ரா கூறுகையில், ‘‘நாட்டுக்கான வருமான வரியை அதிகரித்தல், வரி செலுத்துவோருக்கான சேவைகளை வழங்குதல் என்ற இரட்டைப் பணியை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். வருமான வரி செலுத்தும் நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தையும் வருமான வரித்துறை அதிகரித்துள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com