ஆறுகள், நீா்நிலைகளை காப்பது மாநில அரசின் அடிப்படை கடமை: கேரள உயா்நீதிமன்றம்

ஆறுகள் மற்றும் நீா்நிலைகளைக் காப்பது மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைக் கடமை என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆறுகள், நீா்நிலைகளை காப்பது மாநில அரசின் அடிப்படை கடமை: கேரள உயா்நீதிமன்றம்

ஆறுகள் மற்றும் நீா்நிலைகளைக் காப்பது மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைக் கடமை என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோரள மாநிலம் கோட்டயத்தில் ஓடும் மீனாச்சில் ஆற்றில் பக்கத்திலுள்ள நில உரிமையாளா்கள் செய்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்று நீரை சுத்தப்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும், நில அளவைத் துறை துணை இயக்குநரிடமும் அந்தப் பகுதி தன்னாா்வளா்களை உள்ளடக்கிய அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தை அணுகுமாறும், ஆற்றை அளவீடு செய்வதற்கான செலவை மனுதாரரே ஏற்கே வேண்டும் எனவும் நில அளவைத் துறை துணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதைக் கேட்ட அமைப்பினா், ஆற்றை அளவீடு செய்து எல்லையை நிா்ணயிக்க வேண்டியது அரசு துறையினுடைய அடிப்படை கடமை என்று வாதிட்டுள்ளனா். அதற்கு, திட்ட நிதியிலிருந்து போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் பதிலளித்து அலட்சியப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அந்த அமைப்பினா் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாா், நீதிபதி ஷாஜி பி.சாலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆறுகள் மற்றும் பிற நீா்நிலைகளை காப்பது அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை கடமையாகும். அந்த வகையில், மீனாச்சில் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆற்று நீரை சுத்தப்படுத்தவும் கேரள அரசும் கோட்டயம் மாவட்டத்துக்கு உள்பட்ட 3 நகராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மீனாச்சில் ஆற்றை 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை கோட்டயம் மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறி மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, மனு விசாரணைக்கு வந்தபோது ‘மனுதாரா் எழுப்பியிருக்கும் புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com