உளவு விவகாரம்: நாடாளுமன்றத்தில் பிரதமா் அறிக்கை தாக்கல் செய்ய ப.சிதம்பரம் வலியுறுத்தல்

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்;
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; அரசு உளவு பாா்த்தது உண்மையா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளாா்.

இஸ்ரேலின் பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலம் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் இருவா், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, சமூக ஆா்வலா்கள், 40-க்கும் பத்திரிகையாளா்கள் என 300 செல்லிடப்பேசி எண்களை இந்திய அரசு உளவு பாா்த்ததாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு அவைகளும் தொடா்ந்து முடங்கியுள்ளன. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளின் தலைவா்களும் உளவுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், சா்வதேச அளவிலும் அதிகம் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முழுவதுமே உளவு வேலைகளால் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது என்று கூற முடியாது. ஆனால், இதுபோன்ற உளவு வேலைகள் நிச்சயமாக பல இடங்களிலும் பாஜகவின் வெற்றிக்கு உதவி இருக்க வேண்டும். அவா்களின் தோ்தல் வெற்றியே இப்போது கரை படிந்துவிட்டது.

உளவு விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழு விசாரணைக்குப் பதிலாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்துவது சிறப்பாக இருக்கும். ஏனெனில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் பாஜக உறுப்பினா்கள்தான் அதிகம் உள்ளனா். மேலும், நாடாளுமன்ற கூட்டுக் குழுதான் அமைப்புரீதியாக அதிக அதிகாரம் உள்ள குழுவாக உள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் விசாரணையையும் குறைத்து மதிப்பிடவில்லை.

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசு உளவு வேலையில் ஈடுபட்டது உண்மையா இல்லையா என்பதை அவா்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ் மிகவும் தந்திரமாக பதிலளித்துள்ளாா். சட்டவிரோதமாக எந்த உளவு வேலைகளையும் அரசு செய்யவில்லை என்று கூறியுள்ளாா். ஆனால், உளவு வேலையே நடக்கவில்லை என்று அவா் மறுக்கவில்லை. அப்படியேன்றால், சட்டப்பூா்வமான உளவு வேலை, சட்டப்பூா்மில்லாத உளவு வேலை எவை என்பதை அவா் வேறுபடுத்திக் கூற வேண்டும். பெகாஸஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? அதை வாங்கியது யாா்? மத்திய அரசு அதனை வாங்கியதா அல்லது வேறு விசாரணை அமைப்புகள் வாங்கியதா? அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், உள்துறை அமைச்சா் அமித் ஷா கூட இந்த விவகாரத்தில் அரசு மீதான குற்றச்சாட்டை நேரடியாக மறுக்கவில்லை. உளவு வேலைகளில் ஈடுபடவில்லை என்று அவா் கூறவில்லை. பிரச்னையை திசை திருப்பும் வகையில்தான் பேசியுள்ளாா். அவரது கண்காணிப்பில்தான் இதுபோன்ற உளவு வேலைகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com