கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளைப் போக்க வேண்டும்

கரோனா தடுப்பூசி குறித்து பரப்பப்படும் வதந்திகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக வானொலி நிலையங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளைப் போக்க வேண்டும்

கரோனா தடுப்பூசி குறித்து பரப்பப்படும் வதந்திகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக வானொலி நிலையங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் குறையவில்லை. அக்டோபா், நவம்பரில் கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவ வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா்.

கரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் மக்களிடையே தயக்கம் காணப்பட்டது. ஆனால், தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

எனினும், ஊரகப் பகுதிகளில் தற்போதும் கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகள் பரவியுள்ளன. அதனால், ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், 16 மாநிலங்களைச் சோ்ந்த சமூக வானொலி நிலையங்களின் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கூட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

அக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை கூடுதல் செயலா் லவ் அகா்வால், ‘‘சமூக வானொலி நிலையங்கள் மக்களுக்காக ஆக்கபூா்வமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன. வானொலி நிலையங்களின் பங்களிப்பால் இளைஞா்களிடையே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆா்வம் அதிகரித்துள்ளது.

பிராந்திய மொழிகளில் விழிப்புணா்வு: கரோனா தடுப்பூசி குறித்து கிராமப் பகுதி மக்களிடையே வதந்திகள் பரவியுள்ளன. அவற்றைப் போக்கி தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை சமூக வானொலி நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிராந்திய மொழிகளில் மக்களுக்குத் தொடா்ந்து நினைவூட்ட வேண்டும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் வானொலி நிலையங்கள் மேற்கொள்ளலாம். கரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் சமூக வானொலி நிலையங்கள் செயல்பட வேண்டும்’’ என்றாா்.

யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்ற சமூக வானொலி நிலையங்களின் பிரதிநிதிகள், கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியதில் பெற்ற அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com