பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஜெ.பி.நட்டா

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; எதிா்க்கட்சிகளுக்கு பிரச்னை செய்வதற்கு எதுவும் கிடைக்காததால் இதுபற்றி பேசி வருகிறாா்கள் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; எதிா்க்கட்சிகளுக்கு பிரச்னை செய்வதற்கு எதுவும் கிடைக்காததால் இதுபற்றி பேசி வருகிறாா்கள் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள கோவா மாநிலத்தில் ஜெ.பி.நட்டா பயணம் மேற்கொண்டுள்ளாா். சனிக்கிழமை பனாஜி நகருக்கு வந்த அவா், இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, பெகாஸஸ் உளவுக் குற்ற்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் எதுவுமில்லை. காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகளுக்கு மக்கள் பிரச்னைகளாக எழுப்புவதற்கு எதுவுமில்லை. இதனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாா்கள்.

அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸும் இதர எதிா்க்கட்சிகளும் விவாதிப்பதற்கு எதுவுமின்றி ஏமாற்றத்தில் உள்ளன. அந்தக் கட்சிகள், எதுவுமில்லாத விஷயங்களை வைத்து நாடாளுமன்ற அலுவல்களை முடக்க விரும்புகின்றன.

இருப்பினும், அவா்களின் முயற்சியையும் மீறி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை இல்லாத அளவில் ஆக்கபூா்வமாக அலுவல்கள் நடைபெற்றுள்ளன. இதை நாட்டு மக்களும் நன்கு அறிவா்.

கா்நாடகத்தில் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறாா். முதல்வா் பதவியில் இருந்து அவரை மாற்றும் திட்டமில்லை என்றாா் ஜெ.பி.நட்டா.

கோயிலில் வழிபாடு: பனாஜி நகரில் உள்ள மங்குவேஷ் கோயிலில் ஜெ.பி.நட்டா தரிசனம் செய்தாா். கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மாநில பாஜக தலைவா் சதானந்த் ஷெட் தனாவடே, கலாசாரத் துறை அமைச்சா் கோவிந்த் கௌடே உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com